/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மூன்றாம் டிவிஷன் லீக்: ஆர்.கே.எஸ்., வெற்றி
/
மூன்றாம் டிவிஷன் லீக்: ஆர்.கே.எஸ்., வெற்றி
ADDED : ஏப் 26, 2024 12:19 AM
கோவை;மாவட்ட அளவிலான மூன்றாம் டிவிஷன் கிரிக்கெட் லீக் போட்டியில் ஆர்.கே.எஸ்., கல்வி நிலையம் ஐ.சி.சி., அணி 99 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில், 'என். தாமோதரன் வெல்பேர் டிரஸ்ட்' கோப்பைக்கான மூன்றாம் டிவிஷன் லீக் போட்டிகள் நடந்தது.
இதில், ஸ்ரீ சக்தி கல்லுாரி மைதானத்தில் நடந்த போட்டியில் ஆர்.கே.எஸ்., மற்றும் ஆறுமுகம் கிரிக்கெட் கிளப் அணிகள் மோதின.
முதலில் பேட்டிங் செய்த ஆர்.கே.எஸ்., அணி , திக்கிஸ் (53), மாடசாமி (58) ஆகியோரின் உதவியால் 50 ஓவர்களில் ஒன்பது விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் சேர்த்தது. ஆறுமுகம் அணியின் சூரிய பிரகாஷ் மூன்று விக்கெட் வீழ்த்தினார்.
அடுத்து விளையாடிய ஆறுமுகம் அணி வீரர்களை ஆர்.கே.எஸ்., அணியின் கந்தசாமி (3 விக்கெட்), பார்த்திபன் (3 விக்கெட்), ரித்தின் (3 விக்கெட்) ஆகியோர் கட்டுப்படுத்த, ஆறுமுகம் அணியினர் 38.3 ஓவர்களில் 115 ரன்களுக்கு ஆல் அவுட்டானர்.
இதேபோல், சி.ஐ.டி., கல்லுாரி மைதானத்தில் நடந்த போட்டியில் ரெயின்போ கே.எம்.பி., மற்றும் மிராக்கிள் கிரிக்கெட் கிளப் அணிகள் விளையாடின. முதலில் பேட்டிங் செய்த ரெயின்போ அணி 50 ஓவர்களில் ஆறு விக்கெட் இழப்புக்கு 298 ரன்கள் சேர்த்தன.
அணிக்காக பிரித்வி ராஜ் (77), பொன்மாயாண்டி (74), அருண் பாண்டியன் (43) ஆகியோர் சிறப்பாக விளையாடினர். மிராக்கிள் அணியின் பாலகிருஷ்ணன் நான்கு விக்கெட் கைப்பற்றினார்.
வெற்றிக்கு 299 ரன்கள் தேவை என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய மிராக்கிள் அணி வீரர்கள் விட்டுக்கொடுக்காமல் விளையாடினர். அணியின் கார்த்திக் (76), சம்பத் குமார் (58), சுபாஷ் குமார் (37), ரஞ்சித் (30) ஆகியோர் திறமையாக விளையாடினர்.
எனினும் மிராக்கிள் அணியால் 50 ஓவர்களில் ஆறு விக்கெட் இழப்புக்கு 280 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால், ரெயின்போ அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

