/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இந்த மாதமும் ரேஷனில் பருப்பு வழங்கவில்லை
/
இந்த மாதமும் ரேஷனில் பருப்பு வழங்கவில்லை
ADDED : ஜூன் 18, 2024 11:46 PM
கோவை:கோவையில் இந்த மாதமும் ரேஷனில் பருப்பு வழங்கவில்லை என, குடும்ப அட்டைதாரர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
கோவை மாவட்டத்தில், 1,540 ரேஷன் கடைகள் உள்ளன. இந்த கடைகள் வாயிலாக ரேஷன் கார்டுதாரர்களுக்கு மாதம்தோறும் அரிசி பருப்பு, பாமாயில் உள்ளிட்ட உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
ஒவ்வொரு மாதமும் முதல் வாரத்தில் பருப்பு, பாமாயில் உள்ளிட்ட ரேஷன் பொருட்கள் வழங்கப்படுவது வழக்கம். கடந்த மாதம் தேர்தல் காரணமாக பருப்பு, பாமாயில் வழங்கப்படவில்லை.
மே மாதம் மாதம் வழங்க வேண்டிய பருப்பு, ஜூன் மாதம் சேர்த்து வழங்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர். ஆனால் நேற்று மாலை வரை வழங்கவில்லை.
ரேஷன்கடை பணியாளர்கள் கூறுகையில், 'இந்த மாதம் அரிசி மற்றும் பாமாயில் மட்டும் கடைகளுக்கு சப்ளை செய்யப்பட்டுள்ளது. அதை கார்டுதாரர்களுக்கு வழங்கி விட்டோம்.
மே, ஜூன் ஆகிய இரண்டு மாதங்களுக்கு வழங்க வேண்டிய பருப்பு, இன்னும் குடோனுக்கே வரவில்லை. வந்த பருப்பை தரம் சரியில்லை என, திருப்பி அனுப்பி விட்டதாக தகவல் வந்துள்ளது' என்றனர்.
ரேஷன்கார்டுதாரர் ஒருவர் கூறுகையில், 'தி.மு.க., அரசு வந்ததில் இருந்து, ரேஷன் கடைகளில் பொருட்கள் முறையாக வழங்குவதில்லை. கடந்த மாதம் போல், இந்த மாதமும் பருப்பு வழங்கப்படவில்லை' என்றனர்.