/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
உயிருக்கும், பயிருக்கும் அச்சுறுத்தல்! வன அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்
/
உயிருக்கும், பயிருக்கும் அச்சுறுத்தல்! வன அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்
உயிருக்கும், பயிருக்கும் அச்சுறுத்தல்! வன அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்
உயிருக்கும், பயிருக்கும் அச்சுறுத்தல்! வன அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்
ADDED : மார் 04, 2025 11:23 PM

பெ.நா.பாளையம்; வன விலங்குகளிடமிருந்து மனித உயிர்கள், கால்நடைகள், பயிர்களை காக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வனத்துறை அலுவலகம் முன் விவசாயிகள் முற்றுகை போராட்டம் நடத்த முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
சின்னதடாகம், நரசிம்மநாயக்கன்பாளையம், பெரியநாயக்கன்பாளையம், காரமடை வட்டார பகுதிகளில் குறிப்பாக, மலையோர கிராமங்களில் வனவிலங்குகளின் நடமாட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சில நாட்களுக்கு முன் புதுப்புதூர் கிராமத்தில் விவசாயி வேலுசாமி என்பவரை காட்டுயானை தாக்கி கொன்றது. இதே போல, துடியலூர் தடாகம் ரோடு தாளியூரில் அதிகாலை 'வாக்கிங்' சென்ற மளிகை வியாபாரி நடராஜ், யானை தாக்கி இறந்தார்.
இந்நிலையில், காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகளிடமிருந்து மனித உயிர்கள், கால்நடைகள், பயிர்களை காப்பாற்ற வனத்துறை உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் நேற்று காலை பெரியநாயக்கன்பாளையம் வனச்சரக அலுவலகத்தில் விவசாயிகள் திரண்டனர்.
தமிழக விவசாயிகள் சங்க தலைவர் வேணுகோபால் தலைமையில் பெரியநாயக்கன்பாளையம் பஸ் ஸ்டாண்டிலிருந்து வனச்சரக அலுவலகத்திற்கு ஊர்வலமாக வந்து, அலுவலக வளாகத்துக்குள் நுழைந்து காத்திருப்பு போராட்டத்தை நடத்த முயன்றனர். அவர்களை டி.எஸ்.பி., பொன்னுசாமி, இன்ஸ்பெக்டர் ராஜேஷ் கண்ணன் உள்ளிட்ட போலீசார் தடுத்து நிறுத்தினார்.
அரசு அலுவலக வளாகத்துக்குள் போராட்டம் நடத்த அனுமதி இல்லை எனக் கூறி, வனச்சரக அலுவலக கேட்டுக்கு முன்புறம் அவர்களை தடுத்து நிறுத்தினர்.
தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேணுகோபால் கூறுகையில், ''கிராமங்களுக்குள் நுழையும் வனவிலங்குகளை தடுக்க கூறி போராட்டம் நடத்தினால், அந்தப் போராட்டத்தை போலீசார் தடுக்கின்றனர். அடுத்த கட்டமாக மாநில அளவில் விவசாயிகளை ஒன்று திரட்டி, பெரிய அளவில் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது, புதிய தொழில்நுட்பத்தால் யானைகளின் வரவை கட்டுப்படுத்த முடியும் என வனத்துறையினர் கூறுகின்றனர். அவர்களின் ஆலோசனை ஏற்று அடுத்த கட்ட போராட்டம் குறித்து விவசாயிகளுடன் கலந்து ஆலோசித்து முடிவு செய்யப்படும்,'' என்றார்.