/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தினமும் மூன்று லட்சம் லிட்டர் குடிநீர் :சாலை மறியலை கைவிட்ட பொதுமக்கள்
/
தினமும் மூன்று லட்சம் லிட்டர் குடிநீர் :சாலை மறியலை கைவிட்ட பொதுமக்கள்
தினமும் மூன்று லட்சம் லிட்டர் குடிநீர் :சாலை மறியலை கைவிட்ட பொதுமக்கள்
தினமும் மூன்று லட்சம் லிட்டர் குடிநீர் :சாலை மறியலை கைவிட்ட பொதுமக்கள்
ADDED : மே 01, 2024 12:04 AM
மேட்டுப்பாளையம்;ஆலாங்கொம்பு பகுதியில், குடிநீர் கேட்டு கடந்த இரண்டு நாட்களாக மக்கள் சாலை மறியல் செய்தனர். தினமும் மூன்று லட்சம் லிட்டர் குடிநீர் வழங்க, குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் உறுதி அளித்ததை அடுத்து, பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர்.
காரமடை ஊராட்சி ஒன்றியம், ஜடையம்பாளையம் ஊராட்சிக்கு, சிறுமுகை அருகே மூலையூரில் உள்ள, ஆறு ஊராட்சிகளின் கூட்டு குடிநீர் திட்டத்தில் இருந்தும், ஆலாங்கொம்பில் பவானி ஆற்றில் இருந்தும், திருப்பூர் கூட்டு குடிநீர் திட்டத்தில் இருந்தும், குடிநீர் வழங்கப்படுகிறது.
பவானி ஆற்றில் நீரோட்டம் இல்லாததால், ஆலாங்கொம்பு, மூலையூர் ஆகிய குடிநீர் திட்டத்திலிருந்து தண்ணீர் எடுப்பதில்லை. போதிய குடிநீர் கிடைக்காததால், பொதுமக்கள், 29ம் தேதி, மாலை 6:00 மணியிலிருந்து, சிறுமுகை சாலையில் ஆலாங்கொம்பில் சாலை மறியல் போராட்டம் செய்தனர்.
மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள், திருப்பூர் குடிநீர் திட்டத்திலிருந்து குடிநீர் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். நள்ளிரவு இரவு, 12:00 மணி ஆகியும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் வராததால், பொதுமக்கள் மறியலை கைவிட்டு, கலைந்து சென்றனர்.
நேற்று காலை, 6:00 மணிக்கு பொதுமக்கள் ஆலாங்கொம்பில் சிறுமுகை சாலையில் மீண்டும் சாலை மறியல் செய்தனர். ஒன்பது மணியளவில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய உதவி செயற்பொறியாளர் சித்ரா, மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏ., செல்வராஜ், ஜடையம்பாளையம் ஊராட்சி தலைவர் பழனிசாமி, டி.எஸ்.பி., பாலாஜி, ஒன்றிய செயலாளர் கல்யாணசுந்தரம் ஆகியோர் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
முடிவில் திருப்பூர் குடிநீர் திட்டத்திலிருந்து, தினமும் மூன்று லட்சம் லிட்டர் குடிநீர் வழங்க, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய உதவி செயற்பொறியாளர் தெரிவித்தார். இதை அடுத்து இரண்டு நாள் மறியல் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என, பொதுமக்கள் மகிழ்ச்சியுடன், காலை பத்து மணிக்கு மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.