/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மருத்துவமனைகளுடன் 'சிறுதுளி' ஆலோசனை
/
மருத்துவமனைகளுடன் 'சிறுதுளி' ஆலோசனை
ADDED : மே 01, 2024 11:39 PM
கோவை : பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து, நீர் சேமிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும், 'துளித்துளியாய் சிறுதுளியாய்' விழிப்புணர்வு பிரசார இயக்கத்தை, கடந்த மார்ச் 22ம் தேதி முதல், சிறுதுளி அமைப்பு மேற்கொண்டு வருகிறது.
வரும் ஜூன் 5ம் தேதி வரை, 75 நாட்களுக்கு இந்த பிரசார இயக்கம் மேற்கொள்ளப்படுகிறது.
இதன் ஒருபகுதியாக, மருத்துவமனைகள் மற்றும் ஐ.டி., நிறுவனங்களுடனான ஆலோசனைக் கூட்டம், நொய்யல் மையத்தில் நடந்தது. அரவிந்த் கண் மருத்துவமனை, கங்கா, கே.எம்.சி.ஹெச்., கற்பகம், ராமகிருஷ்ணா பார்மசி கல்லூரி, ஹிந்துஸ்தான், ஜெம், கொங்குநாடு உள்ளிட்ட மருத்துவமனைகள், டிஜிட்டல் நிர்வாணா, காக்னிசன்ட், ரைட் டாட்ஸ் போன்ற நிறுவனங்கள் பங்கேற்றன.
இத்துறையினர் சந்திக்கும் நீர் சார்ந்த சவால்கள், அவற்றுக்கான தீர்வு, மழை நீர் சேமிப்பு முறைகள், சிக்கனம், நீர் பயன்பாட்டை மதிப்பிடுதல் ஆகியவை பற்றியும், கோவையின் நீடித்த வளர்ச்சிக்கு பங்களிப்பு பற்றியும் விவாதிக்கப்பட்டது.
சிறுதுளி நிர்வாக அறங்காவலர் வனிதாமோகன், உயர்மட்டக் குழு உறுப்பினர்கள் பாலகிருஷ்ணன், சங்கீதா சுபாஷ், சதீஷ், சிவா, நடராஜன், மருத்துவமனை மற்றும் ஐ.டி., நிறுவன பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

