/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மல்பெரியில் வேரழுகல் கட்டுப்படுத்த அறிவுரை
/
மல்பெரியில் வேரழுகல் கட்டுப்படுத்த அறிவுரை
ADDED : ஏப் 03, 2024 10:50 PM
உடுமலை : உடுமலை பகுதியில், வெண்பட்டுக்கூடுகள் உற்பத்திக்காக மல்பெரி செடிகளை நட்டு விவசாயிகள் பராமரிக்கின்றனர்.
இச்செடிகளை, பலவகை நோய்க்கிருமிகள் தாக்கி சேதம் விளைவிக்கின்றன. இதில், வேரழுகல் நோயானது 'மேக்ரோபோமினா' மற்றும் 'ப்யூசேரியம்' போன்ற பூஞ்சாணங்களால் ஏற்படுகின்றது.
கோடைக்காலத்தில், இந்நோயின் தாக்குதல் அதிகம் காணப்படும். பாதிக்கப்பட்ட செடிகளின் ஆரம்ப நிலையில் இலைகளின் ஓரங்கள் கருகி பின் செடி முழுவதும் வாடி காணப்படும். அடித் தண்டுப்பகுதியில் கருப்பு நிறத்தில் பூஞ்சாணம் வளர்ந்து படர்ந்திருக்கும்.
இந்நோய் மண் மற்றும் நீர் வாயிலாக பரவுகிறது. செடிகளுக்கு நீர்ப்பாய்ச்சும் போது தாக்கப்பட்ட செடிகளிலிருந்து மற்றசெடிகளுக்கு நீர் பரவாமல் வட்டப்பாத்தி அமைப்பது அவசியம். நோய் தாக்கப்பட்ட காய்ந்த செடிகளை வேரோடு எரித்துவிடவேண்டும்.
நன்மை செய்யும் பூஞ்சாணமாகிய 'டிரைக்கோடெர்மா விரிடி', ஒரு செடிக்கு 25 கிராம் என்ற அளவில் தொழு உரத்துடன் கலந்து தாக்கப்பட்ட செடிகளுக்கும் மற்றும் அதன் அருகிலுள்ள செடிகளுக்கும் இடவேண்டும்.உயிர்ப்பூஞ்சாணக் கொல்லியான 'பேசில்லஸ் சப்டிலிஸ்' என்ற பாக்டீரியாவை ஒரு செடிக்கு 25 கிராம் என்ற அளவில் நடவு செய்யும் போதோ அல்லது கவாத்து செய்யும் போதோ வேர்ப்பகுதியில் இடவேண்டும்.
இவ்வாறு, விவசாயிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

