/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தோட்டக்கலைத்துறை விவசாயிகளுக்கு 'டிப்ஸ்'
/
தோட்டக்கலைத்துறை விவசாயிகளுக்கு 'டிப்ஸ்'
ADDED : செப் 02, 2024 01:26 AM

தொண்டாமுத்தூர்;தொண்டாமுத்தூர் வட்டாரத்தில், நீண்ட நாட்கள் வரை சேமிக்கும் வகையில் சின்ன வெங்காயத்தை பட்டறையில் சேமிப்பது குறித்து, தோட்டக்கலைத்துறையினர் விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளனர்.
தொண்டாமுத்தூர் வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் நந்தினி கூறியதாவது:
தொண்டாமுத்தூர் வட்டாரத்தில் வைகாசி பட்டத்தில், சுமார் 800 ஏக்கர் பரப்பளவில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்பட்டு, தற்போது அறுவடை செய்யப்பட்டு வருகிறது. அறுவடைக்கு, 15 நாட்களுக்கு முன்பு நீர் பாய்ச்சுவதை நிறுத்த வேண்டும்.
2,500 பி.பி.எம்., மாலிக் ஹைட்ராக்சைடு தெளிப்பதன் மூலம், தண்டு கிழங்கு முளைப்பதை தவிர்க்கலாம். அறுவடை செய்த வெங்காயத்தை மண்ணிலிருந்து எடுத்தவுடன், 3 முதல் 5 நாட்கள் நிழலில் உலர வைக்க வேண்டும்.
ஒரு ஹெக்டரில் சுமார் 15 முதல் 18 டன் வரை விளைச்சல் கிடைக்கும். வெங்காயத்தின் சேமிப்பு காலம், நடவு பருவம், ரகங்கள், உரம், நீர் மேலாண்மை, பூச்சி மேலாண்மை, அறுவடைக்கு முன்னும், பின்னும் செய்த நேர்த்திகள், சேமிப்பு இடம் போன்ற பல்வேறு காரணிகளை பொறுத்தே அமையும்.
இந்த ஆண்டு அதிக மழைப்பொழிவு இருந்ததால், வெங்காயத்தை சேமிப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். வெங்காயத்தில் ஈரப்பதம் 60 முதல் 65 சதவீதம் மட்டுமே இருக்க வேண்டும். நல்ல காற்றோட்டம் உள்ள இடத்தில் மட்டுமே சேமிக்க வேண்டும்.
வெங்காயத்தின் கழுத்துப் பகுதியில், 2.5 செ.மீ., விட்டு தழைகளை அகற்றிய பின், சேமிக்க வேண்டும். அப்போது அழுகல், பூஞ்சாணம் தாக்குதல் இருந்தால் அதனை அகற்றி, 'டிரைக்கோடெர்மா விரிடி' அல்லது 'பேசில்லஸ் சப்டிலிஸ்' பவுடரை தூவி விட வேண்டும்.
இதனால், வெங்காயத்தை 6 முதல் 7 மாதங்கள் வரை சேமித்து வைக்கலாம். அதன் பின் விலை உயரும் காலங்களில், விற்பனை செய்து அதிக லாபம் பெறலாம்.
இவ்வாறு, நந்தினி தெரிவித்தார்.