/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
/
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
ADDED : பிப் 21, 2025 11:26 PM

அமிர்தானந்தமயி தரிசனம்
மாதா அமிர்தானந்தமயி, இன்று கோவை வருகை தருகிறார். கணபதி, நல்லாம்பாளையம், ராமசாமி நகரில் உள்ள மாதா அமிர்தானந்தமயி மடத்தில், காலை, 7:00 மணி முதல், சனி தோஷ நிவாரண பூஜையும், லலிதா சஹஸ்ரநாம அர்ச்சனையும் நடக்கிறது. காலை, 10:00 மணி முதல், அம்மாவின் சத்சங்கம், பஜனை, தியானம் மற்றும் தரிசனம் நடக்கிறது.
சுந்தரகாண்டம்
ராம்நகர், கோதண்டராமசுவாமி தேவஸ்தானம் சார்பில், விசேஷ பூஜைகள், ஹோமங்கள், சொற்பொழிவுகள் மற்றும் நாமசங்கீர்த்தனங்கள் நடந்து வருகின்றன. இன்று, மாலை, 6:30 முதல் இரவு, 8:30 மணி வரை, சுந்தரகாண்டம் குறித்து சிறப்புச் சொற்பொழிவு நடக்கிறது.
குண்டம் திருவிழா
வெள்ளலுார், இடையர்பாளையம் - வெள்ளாளபாளையம், கொண்டத்து மாகாளியம்மன் கோவிலில், கடந்த 19ம் தேதி குண்டம் திருவிழா நடந்தது. திருவிழாவில் இன்று இரவு, 7:00 மணி முதல், அபிஷேக, ஆராதனை மற்றும் சான்றோர்க்கு மரியாதை செய்யும் நிகழ்வுகள் நடக்கின்றன.
மக்கள் ஒற்றுமை விழா
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் சார்பில், மக்கள் ஒற்றுமை விழா நடக்கிறது. அன்னுார், சத்தி ரோடு, அம்பாள் பெட்ரோல் பங்க் எதிரில் நடக்கும் விழாவில், 'நையாண்டி தர்பார்', 'இரட்டை அம்மன் நடனம்', 'மரக்கால் ஆட்டம்' போன்ற நிகழ்வுகள் நடக்கின்றன.
'ஹேக்கத்தான்'
அரசூர், கே.பி.ஆர்., கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லுாரி சார்பில், இன்றைய சமூக பிரச்னைகளுக்கு, தொழில்நுட்ப முறையில் தீர்வளிப்பது தொடர்பான, 'ஹேக்கத்தான்' போட்டி நடக்கிறது. காலை, 9:30 மணி முதல் தொடர்ந்து 24 மணி நேரம் ஹேக்கத்தான் போட்டி நடக்கிறது.
குழு விவாதம்
ஒத்தக்கால்மண்டபம், இந்துஸ்தான் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரியின் வானுார்தி பொறியியல் துறையில், நான்கு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் காலை, 10:00 மணிக்கு நடக்கிறது. தொடர்ந்து, தொழில் வளர்ச்சிக்கான கூட்டுச் சூழல் அமைப்பு குறித்து குழு விவாதம் நடக்கிறது.
கலை விழா
சரவணம்பட்டி, சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லுாரியில், 'நயா' என்ற தென்னிந்திய கலை விழா நடக்கிறது. தேசிய அளவிலான கல்லுாரிகளுக்கிடையேயான இந்த போட்டியில், மாணவர்களுக்கு பல்வேறு துறை சார் போட்டிகள் காலை, 9:00 மணி முதல் நடத்தப்படுகிறது.
வள்ளிகும்மி அரங்கேற்றம்
ஆதி மாரியம்மன் வள்ளி முருன் கலைக்குழுவினரின் வள்ளி கும்மி மற்றும் திருக்குறள் கும்மி, 100வது அரங்கேற்ற விழா இன்று நடக்கிறது. கோவில்மேடு, ஆதி விநாயகர் மற்றும் ஆதி மாரியம்மன் கோவில் திடலில் அரங்கேற்றம் நடக்கிறது.
இலக்கிய பேரவை விழா
தொண்டாமுத்துார் தமிழ் இலக்கியப் பேரவை தொடக்க விழா நடக்கிறது. குளத்துப்பாளையம், வீரமாத்தியம்மன் கோவில் வளாகத்தில், காலை, 10:00 மணிக்கு நடக்கிறது. தமிழ் ஆர்வலர்கள், இலக்கிய ஆர்வலர்கள் பலர் கலந்துகொள்கின்றனர்.
குடிநோய் விழிப்புணர்வு முகாம்
தொடர்ச்சியான சிகிச்சை மூலம் குடிப்பழக்கத்திலிருந்து விடுபட முடியும். ஆல்கஹாலிக் அனானிமஸ் சார்பில், குடிநோய் குறித்த விழிப்புணர்வு முகாம், போத்தனுார், புனித ஜோசப் சர்ச் மற்றும் கோவைப்புதுார், ஆஷ்ரம் பள்ளியில் நடக்கிறது. இரவு, 7:00 முதல் 8:30 மணி வரை, முகாம் நடக்கிறது.