/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நாளை தேரோட்டம் மடிப்பிச்சை எடுத்து, அடி அளந்து வழிபாடு
/
நாளை தேரோட்டம் மடிப்பிச்சை எடுத்து, அடி அளந்து வழிபாடு
நாளை தேரோட்டம் மடிப்பிச்சை எடுத்து, அடி அளந்து வழிபாடு
நாளை தேரோட்டம் மடிப்பிச்சை எடுத்து, அடி அளந்து வழிபாடு
ADDED : மே 28, 2024 11:37 PM

பொள்ளாச்சி;பொள்ளாச்சி அருகே, சூலக்கல் மாரியம்மன் கோவில் பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த கோவிலாகும். ஆண்டுதோறும் கோவிலில் தேர்த்திருவிழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
திருவிழாவை முன்னிட்டு, கடந்த,13ம் தேதி திருத்தேர் முகூர்த்த கால் வழிபாடு நடந்தது. கடந்த, 14ம் தேதி வேல் புறப்பாடு, பூச்சாட்டு விழா நடந்தது.
தொடர்ந்து, 20ம் தேதி இரவு, 9:00 மணிக்கு கிராமசாந்தி, வாஸ்து சாந்தியும், 21ம் தேதி இரவு, 9:00 மணிக்கு கம்பம் நாட்டு விழா, பூவோடு எடுத்தல் நிகழ்ச்சி நடந்தது. இதையடுத்து, தினமும் பக்தர்கள் கம்பத்துக்கு மஞ்சள் நீர் ஊற்றி வழிபாடு செய்தனர்.
கடந்த, 22ம் தேதி கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது. 23ம் தேதி முதல் நேற்று வரை தினமும் காலை, 9:00 மணி மற்றும் இரவு, 8:00 மணிக்கு அம்மன் திருவீதி உலா; இரவு, 9:00 மணிக்கு பூவோடு எடுத்தல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
திருவிழா, 18 கிராமங்களில் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. திருவிழாவை முன்னிட்டு, பாரம்பரிய முறைப்படி மக்கள் வழிபாடு செய்தனர்.
பக்தர்கள் ஈரத்துணியுடன் வேப்பிலை ஏந்தி, வீடு, வீடாக சென்று மடிப்பிச்சை பெற்றனர். அதன்பின், அம்மனை வணங்கி தரையில் அடி அளந்து கும்பிட்டு வழிபாடு செய்தபடி கோவிலை அடைந்தனர்.
கோவிலை சுற்றி வந்த பின், கம்பத்துக்கு முன் மடிப்பிச்சையாக பெற்ற அரிசியை வழங்கி அம்மனை வழிபட்டனர்.
'மனக்குறையெல்லாம் போக்கி நோய் நொடியின்றி வாழ வேண்டும்; மும்மாரி மழை பெய்து, விவசாயம் செழிக்க வேண்டும்,' என மனமுருகி வழிபட்டனர்.
மேலும், கோவிலில் உள்ள கம்பத்துக்கு மஞ்சள் நீர் ஊற்றியும், பூவோடு எடுத்து பக்தர்கள் வழிபாடு செய்தனர். பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி, அலகு குத்தி ஊர்வலமாக வந்து அம்மனை வழிபட்டனர். இதனால், கிராமப்பகுதியே திருவிழாக்கோலம் பூண்டுள்ளது.
தேருக்கு அலங்காரம்
கோவில் முன்பாக, 36 அடி உயரம் உள்ள அம்மன் தேரும்; 15 அடி உயரம் உள்ள விநாயகர் தேரும் அலங்கரித்து தயார்படுத்தும் பணி தீவிரமாக நடக்கிறது.
இன்று காலை, 6:00 மணிக்கு மாவிளக்கு, பொங்கல் வைத்தல், இரவு, 7:00 மணிக்கு அம்மன் திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. நாளை (30ம் தேதி) மாலை, 4:30 மணிக்கு பக்தர்கள் வடம்பிடிக்க, தேரோட்டம் துவங்குகிறது.
வரும், 31ம் தேதி மாலை, 4:30 மணிக்கு இரண்டாம் நாள் தேரோட்டமும், ஜூன் 1ம் தேதி மாலை, 5:00 மணிக்கு மூன்றாம் நாள் தேரோட்டமும் நடக்கிறது. 2ம் தேதி மதியம், 12:00 மணிக்கு மஹா அபிேஷக பூஜையுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.