/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஓட்டுச்சாவடி தலைமை, நிலை அலுவலர்களுக்கு பயிற்சி
/
ஓட்டுச்சாவடி தலைமை, நிலை அலுவலர்களுக்கு பயிற்சி
ADDED : மார் 25, 2024 12:06 AM

- நிருபர் குழு -
பொள்ளாச்சி, உடுமலை, வால்பாறை தொகுதிக்கான ஓட்டுச்சாவடி தலைமை மற்றும் நிலை அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் நடந்தது.
பொள்ளாச்சி மகாலிங்கம் பொறியியல் கல்லுாரியில், தலைமை மற்றும் ஒன்று முதல், மூன்று வரையான நிலை அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் நடந்தது.
தேர்தல் நடத்தும் அலுவலர் ஷர்மிளா, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கேத்திரின் சரண்யா, பயிற்சி முகாமினை பார்வையிட்டனர். பயிற்சியினை மண்டல அலுவலர்கள் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் வழங்கினர்.
மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் பயன்படுத்தும் முறை குறித்து விளக்கப்பட்டது. மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்துடன், 'விவி - பேட்' என அழைக்கப்படும் இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளன.
இதன் பயன்பாடு குறித்தும் விளக்கப்பட்டது. பொள்ளாச்சி தொகுதியில், 1,307 ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கும், வால்பாறை தொகுதியில், 1,132 பேருக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது.
தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:
ஓட்டுச்சாவடி தலைமை அலுவலர்கள், ஒன்று, இரண்டு மற்றும் மூன்றாம் நிலை அலுவலர்களுக்கான முதற்கட்ட பயிற்சி முகாம் நடந்தது. அதில், ஓட்டுச்சாவடி அமைவிடம், வழித்தடம் முன்கூட்டியே தெரிந்து கொள்ள வேண்டும். வாக்குப்பதிவுக்கு முந்தைய நாள், ஓட்டுச்சாவடிக்கு செல்ல வேண்டும்.
அங்கு சென்றதும், அடிப்படை வசதிகள் மற்றும் ஓட்டுப்பதிவுக்கு தேவையான உபகரணங்கள் உள்ளதா என உறுதி செய்து கொள்ள வேண்டும்.
ஓட்டுச்சாவடியின், 100 மீட்டர் சுற்றளவுக்கு, எந்தவிதமான அரசியல் விளம்பரங்கள், 200 மீட்டர் சுற்றவுளக்கு பந்தல்களோ அமைக்கப்படவில்லை என உறுதி செய்து கொள்ள வேண்டும்.
ஓட்டுப்பதிவு துவங்குவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன், காலை, 6:00 மணிக்கு ஓட்டுச்சாவடி முகவர்களுக்கு முன்னிலையில், ஒத்திகை ஓட்டுப்பதிவு நடத்த வேண்டும்.
காலை, 7:00 மணி முதல் ஓட்டுப்பதிவு துவங்க வேண்டும். ஓட்டுப்பதிவு துவங்கியதும், வாக்காளரை அடையாளம் காணுதல், வாக்காளர் பதிவேட்டில், பதிவு மேற்கொள்ளுதல், அழியாத மை வைத்தல், வாக்களித்தல் ஆகிய அனைத்து பணிகளும் சரியாக நடக்கிறதா என கண்காணித்திட வேண்டும்.
ஓட்டுச்சாவடியில் உள்ளே நுழையவும், வெளியே செல்லவும் தனித்தனி வழிகள் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். ஓட்டுச்சாவடிக்குள் எந்த ஒரு அரசியல் தலைவரின் படம் இருந்தாலும் அதனை நீக்கிவிட வேண்டும்.
வாக்காளர் உதவி மையம் செயல்படுவதை உறுதிபடுத்திடல் வேண்டும் உள்பட பல்வேறு அறிவுரைகள் வழங்கபட்டுள்ளன. தொடர்ந்து, அடுத்தடுத்து, அலுவலர்களுக்கு பயிற்சி முகாம்கள் நடத்தப்படும். இவ்வாறு, அதிகாரிகள் கூறினர்.
உடுமலை
மடத்துக்குளம் சட்டசபை தொகுதிக்குட்பட்ட ஆசிரியர்கள், கல்லுாரி பேராசிரியர்களுக்கு தேர்தல் பணிகளுக்கான முதல்நிலை பயிற்சி வகுப்பு உடுமலை ஜி.வி.ஜி., விசாலாட்சி பெண்கள் கல்லுாரியில் நடந்தது.
முதற்கட்ட பயிற்சி வகுப்பில் தலைமை ஓட்டுசாவடி அலுவலர்கள், ஓட்டுப்பதிவு அலுவலர்கள் நிலை 2, 3, 4 உள்ளிட்டோருக்கான தேர்தல் பணி நியமன பதிவுகளும் வழங்கப்பட்டன.
காலையில் தலைமை ஓட்டுசாவடி அலுவலர்கள் மற்றும் ஓட்டுப்பதிவு நிலை 2 அலுவலர்களுக்கும், மதியம் வாக்குபதிவு நிலை 3, 4 அலுவலர்களுக்கும் இரண்டு கட்டமாக பிரிக்கப்பட்டு பயிற்சி வழங்கப்பட்டது.மொத்தமாக காலையில் 680, மதியம் 680 அலுவலர்களுக்கு மண்டல அலுவலர் குழுவினர் பயிற்சி அளித்தனர்.
பயிற்சியில் ஓட்டுப்பதிவு இயந்திரத்தை கையாளுவது, ஓட்டுப்பதிவின்போது இயந்திரம் பழுதடைந்தால் சரிசெய்வது, வாக்காளர்களை அடையாளம் காண்பது, ஓட்டுப்பதிவு நிலை இரண்டு அலுவலர்களுக்கான பணிகள், கன்ட்ரோல் யூனிட்டை கையாளுவது குறித்து செயல்விளக்க பயிற்சி அளிக்கப்பட்டது.
பயிற்சியில் பங்கேற்ற அலுவலர்களுக்கு தபால் ஓட்டுக்கான படிவங்கள், 12, 12ஏ வழங்கப்பட்டன.
இப்பயிற்சி வகுப்பை, தேர்தல் நடத்தும் அலுவலர் அபிராமி, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் புஷ்பா தேவி ஆகியோர் பார்வையிட்டனர்.
* உடுமலை சட்டசபை தொகுதிக்குட்பட்ட ஆசிரியர்களுக்கான தேர்தல் பயிற்சி வகுப்பு, வித்யாசகர் கலை அறிவியல் கல்லுாரியில் நடந்தது.
இதில், காலையில், 750 பேரும், மாலையில் 750 பேரும் கலந்து கொண்டனர்.
இங்கு உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ஜஸ்வந்த் கண்ணன், தாசில்தார் சுந்தரம் ஆகியோர் பார்வையிட்டனர்.

