/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அடிக்கடி பழுதாகும் டிரான்ஸ்பார்மர்கள்...ஓவர்லோடு; பெரும்பாடு!3 பேஸ் பயன்பாடு குறித்து விழிப்புணர்வு!
/
அடிக்கடி பழுதாகும் டிரான்ஸ்பார்மர்கள்...ஓவர்லோடு; பெரும்பாடு!3 பேஸ் பயன்பாடு குறித்து விழிப்புணர்வு!
அடிக்கடி பழுதாகும் டிரான்ஸ்பார்மர்கள்...ஓவர்லோடு; பெரும்பாடு!3 பேஸ் பயன்பாடு குறித்து விழிப்புணர்வு!
அடிக்கடி பழுதாகும் டிரான்ஸ்பார்மர்கள்...ஓவர்லோடு; பெரும்பாடு!3 பேஸ் பயன்பாடு குறித்து விழிப்புணர்வு!
ADDED : மே 08, 2024 01:59 AM

-நமது நிருபர்-
கோவையில் மின் தேவை அதிகரித்துள்ள நிலையில், 3 பேஸ் உள்ள வீடுகளில், ஒரே மாதிரியாக 'பேஸ்' வைப்பதால், லோடு அதிகரித்து டிரான்ஸ்பார்மர்கள் பழுதாகி வருவதால், இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த மின் வாரியம் முயற்சி எடுத்துள்ளது.
தமிழகத்தின் கோடையின் தாக்கம் அதிகரித்து, முன் எப்போதும் இல்லாத அளவுக்கு, மின் தேவை உச்சம் தொட்டு வருகிறது. கோவையிலும் வழக்கத்தை விட, வெப்பநிலை நாளுக்கு நாள் உயர்ந்து, மின் விசிறி மற்றும் ஏ.சி.,விற்பனையும், பயன்பாடும் பல மடங்கு அதிகரித்துள்ளது. இதனால் நகரில் மின் நுகர்வும் அதிகமாகி, டிரான்ஸ்பார்மர்களின் 'கெப்பாசிட்டி'க்கும் அதிகமாக மின்சாரம் தேவைப்படுகிறது.
அளவுக்கு அதிகமான மின் நுகர்வு காரணமாக, மின்னழுத்த மாறுபாடும் ஏற்பட்டு, வீடுகளில் மின் விளக்குகள், பிரிட்ஜ், டிவி உள்ளிட்ட பல்வேறு பொருட்களும் பழுதாகி வருகின்றன. இதற்குத் தீர்வு காணும் வகையில், குடியிருப்பு மற்றும் வணிகப் பகுதிகளில், உயர் திறன் கொண்ட டிரான்ஸ்பார்மர்களை மாற்றும் பணியையும் மின் வாரியம் மேற்கொண்டு வருகிறது.
ஆனால் சமீபகாலமாக, டிரான்ஸ்பார்மர்கள் மீண்டும் மீண்டும் பழுதாகி வருவது அதிகரித்து வருகிறது.
இதற்கான காரணத்தை மின் வாரியப் பொறியாளர்கள் ஆய்வு செய்தபோது, மின்தடை ஏற்படும் நேரங்களில், 3 பேஸ் மின் இணைப்பு உள்ள வீடுகளில், ஒரே 'பேஸ்'களில் ஒரே நேரத்தில் அனைவரும் மின் தடத்தை மாற்றிப் பயன்படுத்துவது தெரியவந்துள்ளது. இதனால், ஒரே முனையில் 'லோடு' அதிகரித்து, டிரான்ஸ்பார்மர்களில் பழுது ஏற்படுகிறது.
இந்த 'ஓவர்லோடு' பிரச்னைக்குத் தீர்வு காணும் வகையில், 3 பேஸ் மின் இணைப்பு உள்ள வீடுகளில், மூன்று பேஸ்களையும் வெவ்வேறு எண்களில் (1, 2, 3) வைத்துப் பயன்படுத்துமாறும், மின் தடை ஏற்படும் நேரங்களில் மாற்றினால் மின்சாரம் வந்தபின், அதை மாற்றுமாறு, மின் வாரிய அலுவலர்கள் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்கின்றனர்.
சீரநாயக்கன்பாளையம் மின் வாரிய உதவி செயற்பொறியாளர் வேல்முருகன் அறிவுறுத்தலின்பேரில், பாரதியார் பல்கலை உதவி மின் பொறியாளர் கண்ணன் மற்றும் மின் வாரிய அலுவலர்கள், பாப்ப நாயக்கன்புதுார், வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில், டூ வீலரில் 'மைக்' கட்டி, தெருக்களில் வலம் வந்தபடி, இந்த தகவலை மக்களிடம் கொண்டு சேர்த்து வருகின்றனர்.
இதுபற்றி சந்தேகம் கேட்கும் பலருடைய வீடுகளுக்கு நேரில் சென்றும், 3 பேஸ் இணைப்புகளைப் பயன்படுத்தும் முறை பற்றியும் விளக்கி வருகின்றனர். இந்தப் பிரச்னை, நகரம் முழுவதும் இருந்தாலும், குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டுமே, விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது.
இதுகுறித்து, பரவலாக விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளவும், வரைபடங்களுடன் கூடிய நோட்டீஸ்கள் விநியோகிக்கவும், சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி மக்களுக்கு இதை விளக்கவும் மின் வாரியத்தின் கோவை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதேபோல, தேவையான பகுதிகளில், அதிகத் திறனுள்ள டிரான்ஸ்பார்மர்களை மாற்றவும் வேண்டுமென்பது மக்களின் எதிர்பார்ப்பு.
இது தவறு (இதில் இரண்டு பேஸ்களும் ஒரே எண்ணில் உள்ளன)