/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காந்தை ஆற்றில் நீர் அதிகரித்ததால் பரிசல் பயணம்
/
காந்தை ஆற்றில் நீர் அதிகரித்ததால் பரிசல் பயணம்
ADDED : ஆக 13, 2024 01:29 AM

மேட்டுப்பாளையம்;காந்தையாற்றில் தண்ணீர் தேங்கியதால், கட்டுமான பொருட்கள் எடுத்துச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால், பாலம் கட்டும் பணிகள் பாதிப்பு அடைந்துள்ளன. மேலும் மக்கள் காந்தை ஆற்றை கடக்க பரிசல் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
சிறுமுகை அருகே லிங்காபுரத்திற்கும், காந்த வயலுக்கும் இடையே, காந்தையாறு ஓடுகிறது. 2005ம் ஆண்டு, காந்தையாற்றின் உயரத்தை மையமாக வைத்து, கட்டப்பட்ட பாலம் தண்ணீரில் மூழ்கியது. இந்நிலையில் மலைவாழ் மக்கள், விவசாயிகள் காந்தையாற்றின் குறுக்கே, புதிதாக பாலம் கட்டும்படி தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, தமிழக அரசு காந்தையாற்றின் குறுக்கே, புதிதாக உயர் மட்ட பாலம் கட்ட, 15.40 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது. கடந்த 2023ம் ஆண்டு பிப்ரவரி மாதம், பத்தாம் தேதி பாலம் கட்டும் பணிகள் துவங்கின. இரண்டு ஆண்டுகளில் பாலம் கட்டி முடிக்க, கால நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
பணிகள் பாதிப்பு
ஆற்றின் குறுக்கே, 168 மீட்டர் நீளம், 9.95 மீட்டர் அகலத்தில் பாலமும், பாலத்தின் இரண்டு புறம், 75 மீட்டர் நீளத்துக்கு நடைபாதையும், சாலையும் அமைக்கப்பட உள்ளன. உயர் மட்ட பாலம் அமைக்க, ஆற்றின் குறுக்கே ஆறு இடங்களில் தூண்கள் கட்டப்பட வேண்டும். இதுவரை மூன்று தூண்கள் முழுமையாக கட்டி முடிக்கப்பட்டுள்ளன. கோத்தகிரி மலைப்பகுதியில் பெய்த மழையால், ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பணிகள் பாதிக்கப்பட்டன.
மேலும், பில்லூர் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்ததால், அணை நிரம்பி வழிகிறது. அணையில் இருந்து வெளியேறும் தண்ணீர் பவானி ஆறு வழியாக, பவானி சாகர் அணைக்கு சென்றது. பவானி சாகர் அணையின் தேக்க தண்ணீர், காந்தையாறு வரை தேங்கி உள்ளது. அதனால் காந்தையாற்றின் குறுக்கே, 30 அடிக்கு மேல் தண்ணீர் தேங்கியுள்ளது. பழைய பாலமும் தண்ணீரில் மூழ்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது பொதுமக்கள் பயன்படுத்தி வந்த வழி பாதையிலும் தண்ணீர் தேங்கியுள்ளதால், பொதுமக்கள் தற்போது பரிசலில் பயணம் செய்து வருகின்றனர். இன்னும் இரண்டு அடிக்கு தண்ணீர் உயர்ந்தால் மோட்டார் படகு வாயிலாக, மக்களை அழைத்துச் செல்ல, சிறுமுகை பேரூராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.
புதிய தொழில்நுட்பம்
இதுகுறித்து காந்தவயல் மலைவாழ் மக்கள், லிங்காபுரம் விவசாயிகள் கூறியதாவது: மண் சாலையில் மூன்று அடிக்கு மேல் தண்ணீர் தேங்கி உள்ளதால், நாங்கள் ஆபத்தான நிலையில், பரிசலில் பயணம் செய்து வருகிறோம். ஆற்றில் தண்ணீர் குறைய, ஆறு மாதங்களுக்கு மேலாகும். அதுவரை நாங்கள் பரிசலில் பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தமிழக அரசு, ஆறுகளிலும், கடலிலும் பாலம் கட்டும் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி, காந்தையாற்றின் குறுக்கே தொடர்ந்து பாலம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
இது குறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கூறுகையில், பவானிசாகர் அணையின் நீர்மட்டம் உயர்ந்ததால், ஆற்றில் தண்ணீர் உயர்ந்து, வாகனங்கள் செல்லும் சாலை தண்ணீரில் மூழ்கியது.
பாலம் கட்ட தேவையான, கட்டுமானப் பொருட்கள் எடுத்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. அதனால், பாலம் கட்டும் பணிகள் பாதிப்பு அடைந்துள்ளன என்றனர்.