/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
செடிகள் வேகமாக வளர உதவும் 'ட்ரீ ரிச் பயோ பூஸ்டர்' வளர்ச்சி ஊக்கி
/
செடிகள் வேகமாக வளர உதவும் 'ட்ரீ ரிச் பயோ பூஸ்டர்' வளர்ச்சி ஊக்கி
செடிகள் வேகமாக வளர உதவும் 'ட்ரீ ரிச் பயோ பூஸ்டர்' வளர்ச்சி ஊக்கி
செடிகள் வேகமாக வளர உதவும் 'ட்ரீ ரிச் பயோ பூஸ்டர்' வளர்ச்சி ஊக்கி
ADDED : மே 09, 2024 11:28 PM

பொள்ளாச்சி;வன மரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவன விஞ்ஞானிகளின் முயற்சியால் உருவான 'ட்ரீ ரிச் பயோ பூஸ்டர்' எனப்படும் வளர்ச்சி ஊக்கியை, விவசாயிகள் பயன்படுத்தலாம்.
வனமரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவன விஞ்ஞானிகளின் ஆய்வில், சில வருடங்களுக்கு முன் 'ட்ரீ ரிச் பூஸ்டர்' எனும் வளர்ச்சி ஊக்கியை உருவாக்கினர். சுற்றுச்சூழலுக்கு உகந்த தென்னை நார் கழிவு, தொழு உரம் ஆகியவற்றை ஆதாரமாக கொண்ட இக்கலவை, வேகமாக வளரும் மர இனங்களான சவுக்கு, குமிழ், பெருமரம், மலை வேம்பு, தேக்கு போன்ற மர வகை நாற்றுகளையும் மற்ற பயிர்களையும் வளர்க்க பெரிதும் பயன்படுகிறது.
இக்கலவையானது மற்ற கலவைகளை விட, 30 சதவீதம் முதல் 40 சதவீதம் அதிக அளவு வளர்ச்சி விகிதத்தை கொண்டுள்ளது. இது, மாடித் தோட்டம், வீட்டுத் தோட்டம் முதல் விவசாயம் வரை பயன்படுத்திக் கொள்ளலாம்.
இதுகுறித்து, வனமரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனத்தின் உயிர் வள மேம்பாட்டு துறை விஞ்ஞானி செந்தில்குமார் கூறியதாவது:
ஊட்டச்சத்து கூட்டிய உடனடி பயன்பாட்டுக்கு, இந்த வளர்ச்சி ஊக்கி பயன்படும். குறைந்தளவு நீர் ஊற்றினாலே 3 முதல் நான்கு நாட்களுக்கு நீரை தக்க வைத்துக் கொள்ளும் திறன் கொண்டது.
இதை விவசாய நிலங்களுக்கும் பயன்படுத்தி, மண்ணை உழவு செய்யலாம். சில ஆண்டுகளுக்கு முன், விருதுநகர் மாவட்டத்தில், சமூக காடுகள் திட்டத்தின் கீழ், இது பயன்படுத்தப்பட்டதில், செடிகள் நன்றாக வளர்ச்சியடைந்தன.
மேலும், ஆனைகட்டி, பொள்ளாச்சி போன்ற பகுதிகளில் உள்ள இருளர் பழங்குடியினத்தை சேர்ந்த 19 சுய உதவிக்குழுக்களுக்கு, 'ட்ரீ ரிச் பயோ பூஸ்டர்' தயாரிப்பு குறித்து பயிற்சி வழங்கி, அவர்கள் பொருளாதார நிலை மேம்படுத்த நடவடிக்கை எடுத்திருக்கிறோம்.
இந்த வளர்ச்சி ஊக்கியை, விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மாடித் தோட்டம் உருவாக்குபவர்களுக்கும், இது மிகப்பெரிய பயன் கொடுக்கும்.
இவ்வாறு, அவர் கூறினார்.