/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பெயர்ந்து விழும் தொகுப்பு வீடு மேற்கூரை பழங்குடியின மக்கள் அச்சம்
/
பெயர்ந்து விழும் தொகுப்பு வீடு மேற்கூரை பழங்குடியின மக்கள் அச்சம்
பெயர்ந்து விழும் தொகுப்பு வீடு மேற்கூரை பழங்குடியின மக்கள் அச்சம்
பெயர்ந்து விழும் தொகுப்பு வீடு மேற்கூரை பழங்குடியின மக்கள் அச்சம்
ADDED : மே 26, 2024 12:53 AM

பொள்ளாச்சி:கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே, ஆழியாறு புளியங்கண்டியில், 72 பழங்குடியின குடும்பங்கள் வசிக்கின்றனர். அவர்களுக்கு, 2000ம் ஆண்டு, 41 தொகுப்பு வீடுகள் கட்டித் தரப்பட்டன. வீடுகள் கட்டப்பட்டு, 24 ஆண்டுகளான நிலையில், போதிய பராமரிப்பின்றி சேதமடைந்துள்ளன. ஒவ்வொரு வீட்டிலும், மேற்கூரை கான்கிரீட் பெயர்ந்து விழுந்து, இரும்பு கம்பிகள் வெளியே நீட்டியவாறு உருக்குலைந்து காட்சியளிக்கிறது.
கட்டடம் எப்போது விழுமோ என்ற உயிர் பயத்துடன் மக்கள் வசிக்கின்றனர்.
பழங்குடியின மக்கள் கூறியதாவது:
வீடுகள் சேதமடைந்தது குறித்து, அதிகாரிகளிடம் முறையிட்டும் எவ்வித பயனும் இல்லை. தற்போது, வீட்டின் மீது தார்பாலின் போர்த்தி உள்ளோம். வேலைக்கு சென்று களைப்பாக வந்தால், வீட்டில் நிம்மதியாக துாங்க முடிவதில்லை. குழந்தைகளுடன் துாங்கும் போது கட்டடம் விழுந்து விடுமோ என்ற அச்சத்துடன் நிம்மதி இழந்து தவிக்கிறோம்.
வீடு தான் மோசமாக உள்ளது; வெளியே துாங்கலாம் என்றால், பாம்பு, வனவிலங்குகள் நடமாட்டம் அதிகம் உள்ளது. கர்ப்பிணி தங்கிய வீடு முழுதும் சேதமடைந்துள்ளது. தற்போது, மழை பெய்வதால், இரவு நேரங்களில், அங்கன்வாடி மையத்திலும், பள்ளிக்கூடத்திலும் தங்க வைக்கின்றனர். பங்களா கட்டிக்கொடுக்க வேண்டுமென கேட்கவில்லை. இருக்கும் வீட்டை பராமரித்து கொடுத்தால் பயனாக இருக்கும்.
இதற்கும் நடவடிக்கை இல்லை. அரசு அதிகாரிகள் ஆய்வு மட்டுமே செய்கின்றனர். ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் தான் அதிகாரிகள் கவனம் செலுத்துவரா என, தெரியவில்லை. பழங்குடியின மக்களுக்கு பல்வேறு திட்டங்களை வகுக்கும் அரசு, நாங்கள் குடியிருப்பதற்கு பாதுகாப்பான கட்டடம் கட்டிக்கொடுத்தால் நிம்மதியாக வாழ்வோம்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.