/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மண் கடத்தலில் லாரிகள், இயந்திரங்கள்
/
மண் கடத்தலில் லாரிகள், இயந்திரங்கள்
ADDED : ஏப் 26, 2024 11:22 PM

பெ.நா.பாளையம்;பெரியநாயக்கன்பாளையம் அருகே மண் கடத்தலில் ஈடுபட்ட டிப்பர் லாரிகள், மண் அள்ளும் இயந்திர வாகனங்களை பொதுமக்கள் சிறை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
கோவை வடக்கு தாலுகாவுக்கு உட்பட்ட கூடலுார் நகராட்சி பகுதிகள் மலையிட பாதுகாப்பு பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இங்குள்ள செல்வபுரம் வடக்கு பகுதியில் மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் சட்டத்துக்கு விரோதமாக கனிம வளங்களை மூன்று டிப்பர் லாரிகள், ஒரு மண் அள்ளும் இயந்திரம் அள்ளிக்கொண்டு இருந்தன.
இதுகுறித்து தகவல் அறிந்த அப்பகுதியில் உள்ள கட்டாஞ்சி மலை காணுயிர் பாதுகாப்பு சங்கம் மற்றும் ஊர் பொதுமக்கள் வாகனங்களை சிறை பிடித்து, பெரியநாயக்கன்பாளையம் வருவாய் துறை, போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.
இது குறித்து, கட்டாஞ்சிமலை காணுயிர் பாதுகாப்பு குழு தலைவர் ராஜ்குமார் கூறுகையில், ''இப்பகுதியில் சட்டவிரோதமாக மண் அள்ளும் போக்கு பல நாட்களாக நடந்து வருகிறது.
வன எல்லையில் இருந்து, 1.5 கி.மீ., துாரத்துக்குட்பட்ட பகுதியில் மண் அள்ளக்கூடாது என விதி இருந்தும், அதையும் மீறி மண் அள்ளும் போக்கு இப்பகுதியில் நடந்து வருகிறது.
இதுகுறித்து வருவாய் துறையினருக்கு தகவல் தெரிவித்தோம். பொது மக்களை திரட்டி மண் அள்ள வந்த வாகனங்களை பிடித்து போலீசில் ஒப்படைத்தோம்'' என்றார்.
இது குறித்து, பெரியநாயக்கன்பாளையம் வருவாய் துறையினர் கூறுகையில், ''சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டோம்.
மண் கடத்தலில் ஈடுபட்ட டிரைவர்கள் உதயகுமார், பிரதாப், லோகநாதன், சரவணன் ஆகியோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க பெரியநாயக்கன்பாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது'' என்றனர்.

