/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மின்சாரம் தாக்கி இரு கரடிகள் பலி
/
மின்சாரம் தாக்கி இரு கரடிகள் பலி
ADDED : மே 19, 2024 01:27 AM

பாலக்காடு;கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், கஞ்சிக்கோடு அருகே வலியேரி வன எல்லைப் பகுதி உள்ளது. இங்கு இருந்த மின்கம்பம் உடைந்து கீழே விழுந்து கிடப்பதாக, தகவல் அறிந்து நேற்று முன்தினம் மாலை அப்பகுதிக்குச் சென்ற மின்வாரிய ஊழியர்கள், இரு கரடிகள் மின்சாரம் தாக்கி இறந்து கிடப்பதை கண்டனர்.
அதன்பின், வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த புதுச்சேரி தெற்கு பிரிவு வன அதிகாரி சதீஷ் தலைமையிலான வன துறையினர், சம்பவ இடத்தை பார்வையிட்டு கரடிகள் உடல்களை மீட்டு, தோணியில் உள்ள வன துறையின் தாற்காலிக கால்நடை மையத்திற்கு கொண்டு வந்தனர்.
நேற்று காலை, தலை மை கால்நடை அறுவை சிகிச்சை மருத்துவர் டேவிட் ஆபிரகாமின் தலைமையிலான மருத்துவ குழு, கரடி உடலை பிரேத பரிசோதனை செய்தனர்.
வாளையார் வன சரக அதிகாரி முகம்மதலி ஜின்னா கூறியதாவது:
அய்யப்பன் மலைக்கு கீழ் உள்ள பகுதியில், மின்சாரம் தாக்கியதில், 12 வயதுள்ள தாய் கரடியும், மூன்று வயதுள்ள குட்டி கரடியும் இறந்தன. நேற்று முன்தினம் காலையில் விபத்து நடந்திருக்கலாம் என தெரிகிறது.
இரவில் மழை பெய்த போது, மின்பாதையில் மரம் விழுந்தது, மின்கம்பம் உடைந்து விழுந்துள்ளது. மின் இணைப்பு கம்பிகள் அறுந்து போகாமல் கீழே கிடந்துள்ளது. மின் கம்பியை இரு கரடிகளும் கடந்து சென்ற போது, மின்சாரம் தாக்கி இறந்துள்ளன. பாலக்காடு மாவட்டத்தில் முதல்முறையாக மின்சாரம் தாக்கி கரடிகள் இறந்துள்ளன.
இவ்வாறு, அவர் கூறினார்.

