/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பூம்புகாரில் கொள்ளை; இருவர் கைது
/
பூம்புகாரில் கொள்ளை; இருவர் கைது
ADDED : செப் 02, 2024 01:21 AM
கோவை:பெட்டிக்கடை என நினைத்து பூம்புகாரில் கொள்ளையடித்த, வடமாநில வாலிபர் உட்பட இருவரை போலீசார் கைது செய்தனர்.
கோவை டவுன்ஹால் பகுதியில் தமிழ்நாடு கைவினைப் பொருட்கள் அங்காடியான பூம்புகார் விற்பனையகம் செயல்பட்டு வருகிறது. கடந்த மாதம், 24ம் தேதி இரவு, பூட்டை உடைத்து கல்லாப்பெட்டியில் இருந்து, ரூ.1.44 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது.
மேலாளர் ஆனந்தன் உக்கடம் போலீசில் அளித்த புகாரின்படி, போலீசார் வழக்கு பதிந்து, 2 தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு தனிப்படை போலீசார் சிங்காநல்லுார் மற்றும் ரயில்வே ஸ்டேஷன் பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக சுற்றித்திரிந்த, 2 வாலிபர்களை பிடித்து விசாரித்தனர். அதில், அவர்கள் பூம்புகார் விற்பனையகத்தில் கொள்ளையடித்தவர்கள் என தெரிந்தது.
இருவரையும் கைது செய்து விசாரித்ததில், அவர்கள் விருதுநகரை சேர்ந்த விஜயராமன், 27 மற்றும் கோல்கட்டாவை சேர்ந்த அசிம், 24 என்பதும், அவர்கள் கோவையில் உள்ள நுால் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்ததும் தெரியவந்தது.
இருவரும் மதுபோதையில் பூம்புகார் விற்பனையகத்தை, பெட்டிக்கடை என நினைத்து பூட்டை உடைத்து உள்ளே சென்றதாகவும், அங்கு அதிக பணத்தை பார்த்ததும் கொள்ளையடித்து சென்றதாகவும் போலீசில் தெரிவித்துள்ளனர். இருவரையும் போலீசார் சிறையில் அடைத்தனர். ஒரே வாரத்தில் துப்பு துலக்கி, கொள்ளையர்களை கைது செய்த உக்கடம் இன்ஸ்பெக்டர் ஆனந்தஜோதி, எஸ்.ஐ., கமலக்கண்ணன், ஏட்டுக்கள் கில்பர்ட், பாபு ரமேஷ், வடிவேலு, அசோக் ஆகியோரை போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் பாராட்டினார்.