/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சுகாதாரமற்ற தள்ளுவண்டி கடைகள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்
/
சுகாதாரமற்ற தள்ளுவண்டி கடைகள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்
சுகாதாரமற்ற தள்ளுவண்டி கடைகள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்
சுகாதாரமற்ற தள்ளுவண்டி கடைகள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்
ADDED : ஜூன் 03, 2024 11:23 PM
பொள்ளாச்சி;பொள்ளாச்சியில், சுகாதாரமின்றி செயல்படும் தள்ளுவண்டி உணவு கடைகளைக் கண்டறிந்து, அவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
பொள்ளாச்சி நகரில், மலிவு விலை ஓட்டல், இரவு நேர தள்ளுவண்டி கடைகள் செயல்படுகின்றன. பஜ்ஜி, வடை போன்ற எண்ணெய் பலகாரங்கள், இட்லி, தோசை, ஆப்பம் என பலதரப்பட்ட உணவு பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
இதுதவிர, சிக்கன் வறுவல், மீன் வறுவல் போன்ற அசைவ உணவுக் கடைகளும் ஆங்காங்கே செயல்படுகின்றன. ஆனால், சில கடைகள், சுகாதாரமற்ற சூழலிலும், வாகன போக்குவரத்துக்கு இடையூறாகவும் செயல்படுகின்றன.
கழிவுநீர் தேங்கியுள்ள சாக்கடை ஓரம், உணவு தயாரிக்கப்படுகிறது. குடிநீர் உள்ளிட்டவை சுகாதாரமான முறையில் இருப்பதில்லை.
மழையால், சுகாதார நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ள நிலையில், உடல் நலனை பாதிக்கும், இதுபோன்ற சுகாதாரமற்ற கடைகளையும் கண்காணிக்க வேண்டும்.
தன்னார்வலர்கள் கூறுகையில், 'பொள்ளாச்சி நகரில், திடீரென இரவு நேர கடைகள், தள்ளுவண்டி கடைகள் முளைக்கின்றன. சுகாதாரமாக உணவு தயாரிப்பது, மாசற்ற தண்ணீர் வழங்குவது. உணவு கழிவை வெளியேற்றுவது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
இத்தகைய செயல்பாடுகளை கண்காணிக்கவும், விழிப்புணர்வு நோட்டீஸ் வினியோகிக்கவும் துறை ரீதியான அதிகாரிகளின் கண்காணிப்பு அவசியமாகும்,' என்றனர்.