/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விவசாயிகளுக்கு தனித்துவ அடையாள எண்: பொதுசேவை மையங்களில் இலவசமாக பதியலாம்
/
விவசாயிகளுக்கு தனித்துவ அடையாள எண்: பொதுசேவை மையங்களில் இலவசமாக பதியலாம்
விவசாயிகளுக்கு தனித்துவ அடையாள எண்: பொதுசேவை மையங்களில் இலவசமாக பதியலாம்
விவசாயிகளுக்கு தனித்துவ அடையாள எண்: பொதுசேவை மையங்களில் இலவசமாக பதியலாம்
ADDED : மார் 04, 2025 10:30 PM
பொள்ளாச்சி:
கோவை மாவட்டத்திலுள்ள அனைத்து பொதுசேவை மையங்களிலும் விவசாயிகளுக்கான தனித்துவ அடையாள எண் பெறுவதற்கு இலவசமாக பதிவு செய்யலாம், என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேளாண்மைதுறை இணை இயக்குநர் கிருஷ்ணவேணி அறிக்கை:
கோவை மாவட்டத்தில், மொத்தம் 85,429 விவசாயிகள் உள்ளனர். பிரதமரின் கவுரவ நிதி திட்டத்தின் கீழ், 68,596 பயனாளிகள் பதிவு செய்துள்ளனர். இதில், விவசாயிகள் பதிவேடு திட்டத்தில் இதுவரை, 39,026 பேர் மட்டும் தனித்துவமான அடையாள எண் பெறுவதற்காக பதிவு செய்துள்ளனர்.
விவசாயிகள், அரசின் பல்வேறு திட்டப் பலன்களைப் பெறுவதற்கு தங்களது நில உடைமை விபரங்கள், பயிர் சாகுபடி அறிக்கை தொடர்புடைய ஆவணங்களை ஒவ்வொரு முறையும் சமர்ப்பிக்க வேண்டியுள்ளது.
இதில், ஏற்படும் காலதாமதத்தினை தவிர்க்கும் வகையிலும், அரசின் திட்டங்களில் விவசாயிகள் குறித்த நேரத்தில் பயன்பெற ஏதுவாகவும், அனைத்து விபரங்களையும் மின்னணு முறையில் சேகரம் செய்திட வேளாண் அடுக்குத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
தற்போது, விவசாயிகளின் பதிவு விபரங்களுடன், ஆதார் எண், மொபைல்போன் எண், நிலஉடைமை விபரங்களையும் விடுபாடின்றி இணைக்கும் பணி, சம்பந்தப்பட்ட வருவாய் கிராமத்தில் நடைபெற்று வருகிறது.
இதேபோல, விவசாயிகள் பொது சேவை மையத்திற்கு சென்று, நில உடைமை விபரங்கள் அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டு, தனித்துவமாக தேசிய அளவிலான அடையாள எண், ஒவ்வொரு விவசாயிக்கும் ஏற்படுத்தப்படும்.
2025--26ம் நிதியாண்டில் இருந்து, பிரதம மந்திரி கவுரவ நிதித் திட்டம், பயிர்க் காப்பீடு திட்டம் போன்ற மத்திய, மாநில அரசின் திட்டங்களில், விவசாயிகள் எளிதில் பயன்பெற இந்த தனித்துவ அடையாள எண் மிகவும் அவசியம்.
எனவே, விவசாயிகள் தங்களது கிராமங்களில் வேளாண் உழவர் நலத்துறை அலுவலர்களால் நடத்தப்படும் சிறப்பு முகாம் அல்லது பொது சேவை மையங்களுக்கு நேரடியாகச் சென்று, உரிய ஆவணங்களை சமர்ப்பித்து, எவ்வித கட்டணமின்றி வரும், 31ம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ளலாம்.
இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.