/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குறிச்சிக்கோட்டையில் குறையாத நெரிசல்; சந்திப்பு விரிவாக்கம் தேவை
/
குறிச்சிக்கோட்டையில் குறையாத நெரிசல்; சந்திப்பு விரிவாக்கம் தேவை
குறிச்சிக்கோட்டையில் குறையாத நெரிசல்; சந்திப்பு விரிவாக்கம் தேவை
குறிச்சிக்கோட்டையில் குறையாத நெரிசல்; சந்திப்பு விரிவாக்கம் தேவை
ADDED : ஜூன் 12, 2024 10:18 PM

உடுமலை : குறிச்சிக்கோட்டை நால்ரோட்டில், சந்திப்பு மேம்பாட்டுப்பணிகளை மேற்கொண்டு, நெரிசலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என, நீண்ட காலமாக அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
உடுமலை அருகே குறிச்சிக்கோட்டையில், சின்னாறு ரோடு - தளி - கொமரலிங்கம் ரோடு சந்திக்கும் நால்ரோடு சந்திப்பு அமைந்துள்ளது.
உடுமலை - சின்னாறு ரோட்டில் சுற்றுலா வாகன போக்குவரத்து அதிகளவு இருக்கும். கொமரலிங்கம் ரோட்டிலும், போக்குவரத்து அதிகரித்துள்ளது.
இந்நிலையில், சின்னாறு ரோட்டில் வரும் பஸ்கள் குறிச்சிக்கோட்டையில் நிற்கும் போது பிற வாகனங்கள் அவ்வழியாக செல்ல முடிவதில்லை. கொமரலிங்கம் ரோடும் குறுகலாக இருப்பதால், இதே நிலை நீடிக்கிறது.
இப்பிரச்னைக்கு தீர்வாக, நெடுஞ்சாலைத்துறை சார்பில், சில ஆண்டுகளுக்கு முன், சின்னாறு ரோட்டில் குறிப்பிட்ட தொலைவுக்கு சென்டர்மீடியன் அமைத்தனர். ஆனால், சந்திப்பு பகுதியில், ஆக்கிரமிப்பு அகற்றப்படவில்லை.
இதனால், சென்டர்மீடியன் பகுதியில், வாகனங்கள் விலகிச்செல்ல முடியாமல், நெரிசல் ஏற்படுகிறது. சின்னாறு ரோட்டில் வேகமாக வரும் வாகனங்களால், கொமரலிங்கம் ரோட்டுக்கு செல்லும் வாகனங்கள் விபத்துக்குள்ளாகும் வாய்ப்புள்ளது.
தேவையான இடத்தில், நிழற்கூரை அமைப்பதிலும் இடமில்லாமல், சிக்கல் உள்ளது. பல ஆண்டுகளாக நீடிக்கும் பிரச்னைக்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது.
அப்பகுதி மக்கள் கூறுகையில், 'குறிச்சிக்கோட்டை நால்ரோட்டில், காலை, மாலை நேரங்களில், நெரிசல் அதிகரித்து போக்குவரத்து ஸ்தம்பிக்கிறது. பள்ளி மாணவ, மாணவியர், சின்னாறு ரோட்டை கடக்க சிரமப்படுகின்றனர். சந்திப்பு பகுதியில், ஆக்கிரமிப்பை அகற்றி, விரிவாக்கப்பணிகளை மேற்கொள்ள வேண்டும். உடனடியாக இக்கோரிக்கை குறித்து நெடுஞ்சாலைத்துறையினர் ஆய்வு செய்ய வேண்டும்,' என்றனர்.

