/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரூ.362 கோடி செலவழித்தும் பயன்பாட்டுக்கு வராத குடிநீர் திட்டம்
/
ரூ.362 கோடி செலவழித்தும் பயன்பாட்டுக்கு வராத குடிநீர் திட்டம்
ரூ.362 கோடி செலவழித்தும் பயன்பாட்டுக்கு வராத குடிநீர் திட்டம்
ரூ.362 கோடி செலவழித்தும் பயன்பாட்டுக்கு வராத குடிநீர் திட்டம்
ADDED : ஏப் 23, 2024 02:37 AM

அன்னுார்;ரூ. 362 கோடி ரூபாயில் துவக்கப்பட்ட, கூட்டுக் குடிநீர் திட்ட மேல்நிலைத் தொட்டிகள், வெறும் காட்சிப் பொருளாக உள்ளன.
கோவை, திருப்பூர் மாவட்டங்களில், அன்னுார், அவிநாசி மற்றும் சூலூர் ஒன்றியங்களில், 60க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில், குடிநீர் தட்டுப்பாடு கடுமையாக நிலவி வந்தது.
இதையடுத்து 2019ல் அன்னுார், அவிநாசி மற்றும் சூலூர் ஒன்றியங்களில் கிராமப்புறங்களில் மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய 362 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கூட்டு குடிநீர் திட்ட பணிகள் துவங்கின.
ஊராட்சிகளில் சராசரியாக புதிதாக மூன்று மேல்நிலைத் தொட்டிகள் கட்டப்பட்டன. புதிதாக போர்வெல்கள் போடப்பட்டன. ஏற்கனவே உள்ள போர்வெல்களில் இருந்தும் புதிய போர்வெல்களில் இருந்தும் நீர் எடுக்கப்பட்டு மேல்நிலைத் தொட்டியில் ஏற்றி பொதுக் குழாய் மற்றும் வீட்டு குழாயில் வழங்க திட்டமிடப்பட்டது.
கடந்த பிப். மாதம் 12ம் தேதி கோவையில் முதல்வர் ஸ்டாலின் இத்திட்டத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார். கடும் குடிநீர் தட்டுப்பாட்டில் இருந்த அன்னுார் சுற்றுவட்டார கிராம மக்கள் இதையடுத்து மகிழ்ச்சி அடைந்தனர்.
முதல்வர் துவக்கி வைத்து 70 நாட்கள் ஆகிவிட்டது. ஆனால் ஒட்டர்பாளையம் ஊராட்சியில், ஆயிமா புதூர், காரே கவுண்டன் பாளையம் ஊராட்சியில் கதவுகரை என பல ஊராட்சிகளில் பல கோடி ரூபாய் செலவில் கட்டப் பட்ட மேல்நிலைத் தொட்டிகள் தண்ணீர் ஏற்றப்படாமல் வெறுமனே காட்சியளிக்கின்றன. இது குறித்து வார்டு உறுப்பினர்கள் கூறியதாவது : கட்டி முடிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகியும், தண்ணீர் ஏற்றாததால் சுட்டெரிக்கும் வெயிலில் மேல்நிலைத் தொட்டிகள் பாலம் பாலமாக பிளவு பட்டு வீணாகும் நிலை உள்ளது. 362 கோடி ரூபாய் செலவு செய்தும் தொட்டிகளில் தண்ணீர் ஏற்றாமல் உள்ளனர். முழுமையாக முடியாத திட்டத்தை முதல்வரை வைத்து தேர்தலுக்காக அவசர அவசரமாக திறந்து வைத்துவிட்டனர்.
அதன் பிறகு 70 நாட்கள் ஆகிவிட்டது. இன்னும் பல ஊராட்சிகளில் கிளைக் குழாய்கள் பதிக்கும் பணி முடியவில்லை குழாய்களை மேல்நிலைத் தொட்டி உடன் இணைக்கவில்லை. மோட்டார்கள் இயங்கவில்லை.
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் உடனடியாக அனைத்து குழாய்களையும் முழுமையாக பதித்து, மேல்நிலைத் தொட்டிகளுடன் இணைத்து, தொட்டிகளில் தண்ணீர் ஏற்றி அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வழங்க வேண்டும்.
இவ்வாறு வார்டு உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

