/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'கழிவு அகற்ற நவீன கருவி பயன்படுத்தணும் '
/
'கழிவு அகற்ற நவீன கருவி பயன்படுத்தணும் '
ADDED : ஆக 01, 2024 01:45 AM
கோவை : மனித கழிவுகளை அகற்ற, நவீனக் கருவிகளை பயன்படுத்த, அரசு முயற்சி எடுக்க வேண்டும் என, தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தின் செயலாளர் அசரப்அலி பேசினார்.
தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தின், கோவை மாவட்டக்குழு கூட்டம், சங்க அலுவலகத்தில் நடந்தது.
கூட்டத்துக்கு, அமைப்பின் மாவட்டத் தலைவர் முருகன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் அசரப்அலி தீர்மானங்களை விளக்கி பேசியதாவது:
பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி அமைப்புகள் மூலம் பொது சுகாதாரம், சாலை வசதி, குடிநீர் வழங்கல், தெருவிளக்கு, திடக்கழிவு மேலாண்மை, கழிவுநீர் அகற்றுதல் போன்ற பணிகளில் 2.5 லட்சம் பேர் வேலை செய்கின்றனர்.
இந்த வேலை வாய்ப்புகளில் பட்டியலின மக்கள், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் மற்றும் பெண்கள் செய்து வருகின்றனர். நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் குறித்து, தமிழக அரசால் சில மாதங்களுக்கு முன் நிறைவேற்றப்பட்ட அரசாணை மூலமாக துாய்மை பணி, ஓட்டுனர், குடிநீர் வழங்குதல், எலக்ட்ரீசியன், பம்ப் அட்டெண்டர் போன்ற பணியிடங்கள் பறிக்கப்பட்டுள்ளன.
இந்த பணியிடங்களை, ஒப்பந்த முறையில் தனியார் நிறுவனங்கள் மூலம் நிரப்ப, தமிழக அரசு முயன்று வருகிறது. அரசு இந்த முயற்சியை கைவிட வேண்டும்.
மனிதக் கழிவை மனிதன் அள்ளும் நடைமுறை, தடை செய்யப்பட்டு இருந்தாலும், இன்று அந்த அவலம் நீடித்து வருகிறது. இந்நிலையை மாற்ற, அரசு முயற்சி எடுக்கவில்லை. மனிதக்கழிவுகளை அகற்ற, நவீனக் கருவிகளை பயன்படுத்த அரசு முயற்சி எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார்.
கூட்டத்தில் மாவட்டக்குழு உறுப்பினர்கள் சக்திவேல், சுப்பையன், கணேசன் புருஷோத்தமன், ஜீவா, உள்ளிட்டோர் பங்கேற்றனர்.