/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தரமற்ற சமையல் எண்ணெய் பயன்பாடு தவிர்க்க வேண்டும்
/
தரமற்ற சமையல் எண்ணெய் பயன்பாடு தவிர்க்க வேண்டும்
ADDED : ஜூன் 26, 2024 09:39 PM
பொள்ளாச்சி : உணவுப் பண்டங்கள் தயாரிப்புக்கு பயன்படுத்தப்படும் சமையல் எண்ணெயின் தரத்தை கண்டறிந்து, அத்துமீறல் இருந்தால் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி நகரில், பெரிய மற்றும் சிறிய அளவிலான ஓட்டல்கள், டீக்கடைகள், தள்ளுவண்டிக் கடைகளில், சமையல் எண்ணெய் பயன்படுத்தி உணவு பண்டங்கள் தயாரிக்கப்படுகின்றன.
சில கடைகளில், பயன்படுத்திய எண்ணெய் மீண்டும் பயன்படுத்தப்படுகிறது. மேலும், கலப்படம் செய்யப்பட்ட எண்ணெய்யில் தயாரிக்கப்படும் உணவுப் பண்டங்கள், சுவை குறைவாகவும், குறுகிய நாட்களில் கெட்டுப் போய்விடுவதாகவும் புகார் எழுந்துள்ளது.
மக்கள் கூறியதாவது:
சில தள்ளுவண்டிக் கடைகளில், திரும்பத் திரும்ப சூடு செய்யப்பட்டு, பயன்படுத்தப்பட்ட எண்ணெய் பயன்பாடு உள்ளது. தரம் குறைந்த எண்ணெய் பயன்பாடு அறியாமல் பலரும் உணவுப் பண்டங்களை வாங்கி உட்கொள்கின்றனர்.
இதனால், வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட உடல்உபாதைகளுக்கு ஆளாகி அவதிப்படுகின்றனர். உணவுப் பாதுகாப்புத் துறையினர், கடைகளில் ஆய்வு நடத்தி, எண்ணெய் மாதிரிகளை பகுப்பாய்வுக்கு உட்படுத்துவதும் கிடையாது.
தொடர்ந்து பயன்படுத்தப்படும் சமையல் எண்ணெய்யின் தரத்தை கண்டறிய வேண்டும். அத்துமீறல் இருந்தால், நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.