/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
2,700 மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி
/
2,700 மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி
ADDED : ஜூலை 02, 2024 02:35 AM
மேட்டுப்பாளையம்,;கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமம் மற்றும் குக்கிராமங்களில் தேசிய கால்நடை நோய் தடுப்புத்திட்டத்தின் கீழ் 2024ம் ஆண்டிற்கான கோமாரி நோய் தடுப்பூசி பணி கடந்த மாதம் 10ம் தேதி துவங்கியது. பசு மற்றும் எருமைகளுக்கு இந்த தடுப்பூசி போடப்பட்டது.
மேட்டுப்பாளையம் தாலுகாவில் மட்டும் 23 ஆயிரத்து 500 மாடுகள் உள்ளன. 10 கால்நடை மருந்தகம், 2 கால்நடை கிளை மருந்தகம் உள்ளன. இதில் காரமடை கால்நடை மருந்தகத்திற்குட்பட்ட 2,700 மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இதுகுறித்து கால்நடை துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ஒவ்வொரு கிராமங்களுக்கும் நேரடியாக சென்று மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடப்பட்டது.
காரமடை நகர் பகுதி, சிக்காரம்பாளையம், ஓடந்துறை உள்ளிட்ட பகுதிகளில் தினமும் 200க்கும் மேற்பட்ட மாடுகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது. அதன் படி காரமடை மருந்தகத்திற்குட்பட்ட 2700 மாடுகளுக்கும் கோமாரி நோய் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசி போடவிட்டால் கோமாரி நோய் மாடுகளை தாக்க வாய்ப்புள்ளது.
இந்நோயினால் இறப்புகள் குறைவாக இருந்த போதிலும், கறவை மாடுகளில் பால் உற்பத்தி குறைவு, எருதுகளின் வேலைத் திறன் குறைவு, கறவை மாடுகளில் சினை பிடிப்பு தடைபடுவது போன்ற பாதிப்புகள் ஏற்படலாம், என்றார்.