/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வாடல் நோயை எதிர்கொள்ளும் தென்னை ரகம் குறித்து ஆய்வு தென்னை திருவிழாவில் துணை வேந்தர் தகவல்
/
வாடல் நோயை எதிர்கொள்ளும் தென்னை ரகம் குறித்து ஆய்வு தென்னை திருவிழாவில் துணை வேந்தர் தகவல்
வாடல் நோயை எதிர்கொள்ளும் தென்னை ரகம் குறித்து ஆய்வு தென்னை திருவிழாவில் துணை வேந்தர் தகவல்
வாடல் நோயை எதிர்கொள்ளும் தென்னை ரகம் குறித்து ஆய்வு தென்னை திருவிழாவில் துணை வேந்தர் தகவல்
ADDED : ஆக 28, 2024 07:54 PM

கோவை:வேளாண் பல்கலை, தென்னை வளர்ச்சி வாரியம், பாரசூட் கல்ப விருக்ஷா அறக்கட்டளை சார்பில், 'கோகனட் பெஸ்டிவல்' எனப்படும் தென்னை திருவிழா 2024 இரண்டு நாள் கருத்தரங்கு, பல்கலை வளாகத்தில் துவங்கியது.
கருத்தரங்கையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கண்காட்சி அரங்கைத் திறந்து வைத்து, கலெக்டர் கிராந்திகுமார் பேசியதாவது:
தென்னை விவசாயிகளுக்கு சில முக்கிய பிரச்னைகள் உள்ளன. முதலாவது பருவநிலை மாற்றம். தொடர் வறட்சி, அதீத மழைப்பொழிவு என கணிக்க முடியாத பருவநிலை, சிக்கலை உருவாக்குகிறது. வருங்காலத்திலும் எப்படி பருவநிலை மாறும் என கணிக்க முடியாது. எனவே, வறட்சியைத் தாங்கும் ரகங்கள் தேவை.
இரண்டாவது பிரச்னை, ஆள் பற்றாக்குறை. இதற்கு, தொழில்நுட்பம், இயந்திர மயமாக்கல்தான் தீர்வு.
அடுத்த முக்கிய பிரச்னை, நிலையற்ற விலை. கொப்பரை விற்பனை மட்டுமே பிரதான வருவாயாக இருக்கக்கூடாது. பல்வேறு வருவாய் வழிகள் கண்டறியப்பட வேண்டும். ஊடுபயிர் சாகுபடி, மதிப்புக்கூட்டப்பட்ட சேவைகள் என உரிய வாய்ப்புகளை விவசாயிகள் பயன்படுத்த வேண்டும்.
உலக சந்தையில், தேங்காய்ப்பால் போன்ற தேங்காய் சார்ந்த உணவுகள் 'சூப்பர் புட்' என பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. இதற்கான ஏற்றுமதி வாய்ப்புகளை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்
இவ்வாறு, கிராந்திகுமார் பேசினார்.
பல்கலை துணைவேந்தர் கீதாலட்சுமி பேசுகையில், “ஈரியோபைட், வெள்ளை ஈ என பேரிடர்களை தென்னை விவசாயிகள் சந்தித்துள்ளனர். கேரள வேர்வாடல் நோயும் இதனுடன் சேர்ந்து கொண்டுள்ளது. வேளாண் பல்கலையில் இரு தென்னை ஆராய்ச்சி நிலையங்கள் உள்ளன. இவற்றுக்கு 2023ல் நாட்டிலேயே சிறந்த ஆய்வு மையங்கள் என்ற விருது கிடைத்தது. வாடல் நோய் எதிர்ப்புத் திறன் கொண்ட தென்னை ரகங்களை உருவாக்கும் முயற்சி நடந்து வருகிறது. வேளாண்சுற்றுலா, பல்லடுக்கு சாகுபடி, இயற்கை விவசாயம் என, சாத்தியமான அனைத்து வழிகளையும் பல்கலையானது விவசாயிகளுடன் பகிர்ந்து வருகிறது” என்றார்.
சர்வதேச தென்னை சமூக (ஐ.சி.சி.,) செயல் இயக்குனர் ஜெல்பினா அலுவ், பத்மஸ்ரீ விருதாளர் காமாட்சி செல்லம்மாள், நீர் மற்றும் புவியிடத் தரவுகள் படிப்பு மைய இயக்குனர் பழனிவேலன், கல்பவிருக்ஷா அறக்கட்டளை இயக்குனர் நிதின் கதுாரியா, தென்னை வளர்ச்சி வாரிய தலைமை அலுவலர் ஹனுமந்த கவுடா உட்பட துறைசார்ந்த நிபுணர்கள், விவசாயிகள் பங்கேற்றனர்.