/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கழிவுநீர் கலப்பதை கண்டித்து கிராம மக்கள் கூட்டம்
/
கழிவுநீர் கலப்பதை கண்டித்து கிராம மக்கள் கூட்டம்
ADDED : ஆக 01, 2024 12:58 AM
அன்னுார் : அன்னுார் குளத்தில் இருந்து வெளியாகும் நீர் மற்றும் மழை நீர் ஓடை வழித்தடத்தில் குன்னத்தூராம்பாளையம் வழியாக எருக்கலாம் குளத்தில் சேருவதற்கு ஆக்கிரமிப்பு அகற்றும் பணி கடந்த மாதம் துவங்கியது. எதிர்ப்பு காரணமாக பாதியில் நின்றது.
இந்நிலையில் அன்னுாரில் இட்டேரி வீதியில் இருந்து கழிவு நீரை எருக்கலாம் குளத்தில் கலக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து விவாதிக்க கஞ்சப்பள்ளியில் ஊர் கூட்டம் நடந்தது. கஞ்சப்பள்ளி, ஊத்துப்பாளையம், தாச பாளையம், குமரகவுண்டன் புதூர், நீலகண்டன் புதூர் ஆகிய ஊர்களைச் சேர்ந்த 500 பேர் பங்கேற்றனர். முன்னாள் ஊராட்சி தலைவர் சின்னச்சாமி தலைமை வகித்தார். கூட்டத்தில் அன்னுார் குளத்திலிருந்து வரும் நீர் மற்றும் மழைநீர் ஓடை வழித்தடம் வழியாக எருக்கலாம் குளத்தில் கலப்பதற்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால் கழிவுநீரை எருக்கலாம் குளத்தில் கலப்பதற்கு விட மாட்டோம்.
பல ஆண்டுகளுக்குப் பிறகு 85 ஏக்கர் பரப்பளவு உள்ள எருக்கலாம் குளத்தில் 100 சதவீதம் நீர் நிரம்பியுள்ளது. இங்கு நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. கூடுதலாக விவசாயம் செய்ய துவங்கி உள்ளனர். இந்நிலையில் கழிவு நீரை குளத்தில் கலப்பதால் அனைத்தும் பாழாகி விடும். ஒவ்வொரு ஊரிலும், ஒவ்வொரு வார்டிலும் வெளியாகும் கழிவுநீரை சுத்திகரித்து அப்பகுதியிலேயே உறிஞ்சுகுழி அமைத்து கீழே இறக்க வேண்டும்.
மொத்தமாக பல ஆயிரம் லிட்டர் கழிவு நீரை குளத்தில் கலக்கக் கூடாது. இதுகுறித்து கஞ்சப்பள்ளி ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்றி கோவை கலெக்டர் அலுவலகத்துக்கும் தமிழக முதல்வரின் தனிப் பிரிவுக்கும் அனுப்ப கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. ஊராட்சி தலைவர் சித்ரா, துணைத் தலைவர் வசந்த், உள்பட பலர் பங்கேற்றனர்.