/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குழந்தைகளுக்கு வைட்டமின் 'ஏ' திரவம் வழங்கும் முகாம்
/
குழந்தைகளுக்கு வைட்டமின் 'ஏ' திரவம் வழங்கும் முகாம்
குழந்தைகளுக்கு வைட்டமின் 'ஏ' திரவம் வழங்கும் முகாம்
குழந்தைகளுக்கு வைட்டமின் 'ஏ' திரவம் வழங்கும் முகாம்
ADDED : ஜூலை 02, 2024 01:10 AM

கோவை;வயிற்றுப்போக்கு தடுப்பு மற்றும் வைட்டமின் 'ஏ' திரவம் வழங்கும் முகாம் துவங்க விழா நடந்தது. கலெக்டர் கிராந்திகுமார் துவங்கி வைத்தார்.
கோவை மாநகராட்சி ராமநாதபுரம் துவக்கப்பள்ளியில், பொது சுகாதார மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையின் சார்பில், இம்முகாம் நடந்தது. குழந்தைகளுக்கு ஓ.ஆர்.எஸ்., வைட்டமின் 'ஏ' திரவம் மற்றும் துத்தநாக மாத்திரைகள் வழங்கப்பட்டன.
அப்போது மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் கூறியதாவது:
மழைக்காலங்களில் சுத்தமில்லாத தண்ணீரால், குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு வர வாய்ப்பு உள்ளது. வயிற்றுப்போக்கினால் அதிகமாக பாதிக்கப்பட்டால், அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில், தேவையான சிகிச்சை வழங்கப்படும்.
குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்று போக்கிற்கு, சுகாதாரமற்ற குழந்தை வளர்ப்பு முறைகள், கை சுத்தம் பேணாமல் இருத்தல், சுகாதாரம் மற்றும் பாதுகாப்பான குடிநீர் பற்றிய விழிப்புணர்வு இல்லாமை ஆகியவை காரணங்கள்.
இந்த முகாம், ஆக., 31ம் தேதி வரை இரு மாதங்கள் (புதன் மற்றும் ஞாயிறு நீங்கலாக) அனைத்து அங்கன்வாடி மையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் நடைபெறும்.
இம்முகாமின் வாயிலாக, கோவை மாவட்டத்தில் உள்ள, 2,72,024 குழந்தைகளுக்கு வைட்டமின் 'ஏ' திரவம் வழங்கப்படும். பொதுமக்கள் தங்கள் 6 மாதம் முதல், 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு, வைட்டமின் 'ஏ' திரவம் அளித்து, கண் பார்வை குறைபாடில்லாத இளைய சமுதாயத்தினரை உருவாக்கிட வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.
முகாமில் மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன், துணை மேயர் வெற்றிச்செல்வன், பணிகள் குழு தலைவர் சாந்திமுருகன், பொது சுகாதார குழுத் தலைவர் மாரிச்செல்வன், மாவட்ட சுகாதார அலுவலர் அருணா, உட்பட பலர் கலந்துகொண்டனர்.