ADDED : ஏப் 16, 2024 12:55 AM

கோவை;கோவை லோக்சபா தொகுதியில் பயன்படுத்தப்படும் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், ஜி.சி.டி., கல்லுாரியில் பாதுகாப்பாக வைக்கப்படும். ஜூன் 4ல் ஓட்டுகள் எண்ணப்படும். இயந்திரங்களை பாதுகாப்பாக வைத்திருக்க, 'ஸ்ட்ராங் ரூம்' தயார்படுத்தும் பணி நடந்து வருகிறது.
ஒரே கட்டடத்தில் ஆறு சட்டசபை தொகுதிகளுக்கும் அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்க ஒரு அறை, ஓட்டுச்சாவடிகளில் பயன்படுத்திய பொருட்களை வைத்திருக்க ஒரு அறை தயார் செய்யப்பட்டுள்ளது.
37 வேட்பாளர்கள் போட்டியிடுவதால், மூன்று இயந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ளன. ஆகவே, ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும், கூடுதலாக ஒரு 'ஸ்ட்ராங் ரூம்' ஏற்படுத்தப்படுகிறது.
ஓட்டுகள் எண்ணும் அறைகளில், 14 டேபிள்கள் போடப்பட்டு, கம்பி வேலி அமைக்கப்படுகிறது. இதற்கான வேலைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
ஓட்டு எண்ணும் அறை, 'ஸ்ட்ராங் ரூம்'கள், நடைபாதை, நுழைவாயில் உள்ளிட்ட முக்கியமான இடங்களில், 'சிசி டிவி' கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன.
'95 சதவீதம் தயார்'
மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரனிடம் கேட்டதற்கு, ''ஓட்டு எண்ணிக்கை மையம், 95 சதவீதம் தயாராகி விட்டது. சின்ன சின்ன திருத்தங்கள் கூறியிருக்கிறோம். ஒரே கட்டடத்தில், தரைத்தளத்தில் மூன்று தொகுதிகள், முதல் தளத்தில் மூன்று தொகுதிகளுக்கான ஓட்டுகள் எண்ணப்படும்,'' என்றார்.

