/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வாக்காளர் பட்டியலில் குளறுபடியால் ஓட்டு சதவீதம் குறைந்தது
/
வாக்காளர் பட்டியலில் குளறுபடியால் ஓட்டு சதவீதம் குறைந்தது
வாக்காளர் பட்டியலில் குளறுபடியால் ஓட்டு சதவீதம் குறைந்தது
வாக்காளர் பட்டியலில் குளறுபடியால் ஓட்டு சதவீதம் குறைந்தது
ADDED : ஏப் 21, 2024 01:31 AM
கோவை;கோவை லோக்சபா தொகுதியில், வாக்காளர் பட்டியலில் இருந்த குளறுபடியே, ஓட்டு சதவீதம் குறைவுக்கான காரணமாக சொல்லப்படுகிறது.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், கோவை தொகுதியில், 64.81 சதவீதமே ஓட்டு பதிவாகியிருந்தது. இது, 2019 தேர்தலை காட்டிலும், 0.95 சதவீதமே அதிகம்.
இம்முறை தேர்தலுக்கு பயன்படுத்திய, வாக்காளர் பட்டியலில் இருந்த குளறுபடியால், ஓட்டு சதவீதம் குறைந்திருப்பதாகவும், தவறில்லாத வாக்காளர் பட்டியல் தயாரிக்க, தேர்தல் பிரிவினர் தவறி விட்டதாகவும், குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.
தவறில்லாத வாக்காளர் பட்டியல் தயாரிக்கவே முடியாதா என, தேர்தல் பிரிவினரிடம் கேட்டதற்கு, அவர்கள் கூறியதாவது:
l தொழில்நுட்ப முறையை கையாள்வதால், கள நிலவரம் அறியாமல் வாக்காளர்களின் விபரங்கள் நீக்கப்பட்டு விடுகின்றன. நேரடியாக வீடு வீடாகச் சென்று கள ஆய்வு செய்து, உறுதிப்படுத்த வேண்டும்.
l பான் கார்டு - ஆதார் கார்டு, வங்கி கணக்கு - ஆதார் கார்டு, ரேஷன் கார்டு - ஆதார் கார்டு இணைத்தது போலவே, வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதை கட்டாயமாக்க வேண்டியது அவசியம். அப்போது, ஒரு வாக்காளருக்கு ஓரிடத்தில் மட்டுமே ஓட்டுரிமை இருக்கும்.
l வாக்காளர் பட்டியல் விபரங்களை, ரேஷன் கடை ஊழியர்கள் மூலம் சரிபார்க்க வேண்டும். 1,000 குடும்பத்துக்கு ஒரு ரேஷன் கடை இருக்கிறது. இப்பணியாளர்கள் அக்குடும்பத்தை சேர்ந்த அத்தனை உறுப்பினர்களையும் அறிந்து வைத்திருப்பர். பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கன், கொரோனா நிவாரண நிதி டோக்கன் உள்ளிட்ட, பல்வேறு அரசு திட்டங்கள் இவர்கள் மூலமாகவே செயல்படுத்தப்படுகிறது. எளிதாக மக்களை, அரசின் நலத்திட்டங்கள் சென்றடைகின்றன. அதேபோல், அந்தந்த பகுதிக்குரிய வாக்காளர் பட்டியல் விபரங்களை, இவர்கள் மூலம் சரிபார்த்தால், எளிதாக தவறை நிவர்த்தி செய்யலாம்.
l வரும், 2026 சட்டசபை தேர்தலுக்குள் தவறில்லாத வாக்காளர் பட்டியல் தயாரிக்க, தேர்தல் ஆணையம் முனைப்பு காட்ட வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள, வார்டு வாரியாக பட்டியல் தயாரித்து, கள ஆய்வு செய்து, இறுதி பட்டியல் தயாரிக்க வேண்டும்; வாக்காளர்களின் மொபைல் போன் எண்களையும் இணைத்தால், எஸ்.எம்.எஸ்., அனுப்புவதற்கு வாய்ப்பாக இருக்கும்.
l தற்போது நடந்து முடிந்த தேர்தலுக்கு, ஒவ்வொரு ஓட்டுச்சாவடிக்கும் வாக்காளர் பட்டியல் வழங்கப்பட்டது. ஓட்டுப்பதிவு செய்த வாக்காளர்களின் பெயர்கள் வட்டமிடப்பட்டு, பதிவேட்டில் பதியப்பட்டு இருக்கிறது. ஓட்டுப்போடாத வாக்காளர்கள் பெயர்களை, தனியாக 'லிஸ்ட்' எடுத்து, அவர்களது வீடுகளுக்கு நேரில் சென்று, ஆய்வு நடத்தினால் போதும்.
அந்த முகவரியில் வாக்காளர்கள் இருக்கிறார்களா; இல்லையா என உறுதிப்படுத்த வேண்டும். இடம் பெயர்ந்து விட்டால், தனியாக பட்டியலிட்டு, பெயர்களை நீக்க வேண்டும். இதுபோன்ற முயற்சிகளை தேர்தல் ஆணையம் துணிச்சலாக மேற்கொண்டால் மட்டுமே, தவறில்லாத வாக்காளர் பட்டியல் தயாரிக்க முடியும். இல்லையெனில், ஒவ்வொரு தேர்தலிலும் குழப்பங்கள் தொடர் கதையாக வந்து கொண்டே இருக்கும். நேர்மையான வேட்பாளர் ஆட்சிக்கு வருவது கனவாகவே தொடரும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.

