/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பத்திரம்
/
ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பத்திரம்
ADDED : மார் 22, 2024 08:42 PM
மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையத்திற்கு மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டு, அனைத்து அரசியல் கட்சியினர் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில், தனியார் கல்லுாரியின் அறையில் பலத்த பாதுகாப்புடன் பூட்டி 'சீல்' வைக்கப்பட்டது.
கோவை மாவட்டத்திற்கு உட்பட்ட மேட்டுப்பாளையம் சட்டசபை தொகுதி, நீலகிரி லோக்சபா தொகுதிக்குள் வருகிறது.
லோக்சபா தேர்தல் முன்னிட்டு, மேட்டுப்பாளையம் பகுதியில் மொத்தம் 321 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன.
இதற்காக, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், கோவை மாவட்ட தேர்தல் பாதுகாப்பு அறையில் இருந்து, போலீஸ் பாதுகாப்புடன் இரண்டு கன்டெய்னர் லாரிகளில், மேட்டுப்பாளையம் சிறுமுகை சாலை அருகே, தனியார் பாலிடெக்னிக் கல்லூரிக்கு கொண்டு வரப்பட்டது.
பின், அனைத்து அரசியல் கட்சியினர் முன்னிலையில், மேட்டுப்பாளையம் தாசில்தார் சந்திரன் மற்றும் அதிகாரிகள் மேற்பார்வையில் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் இறக்கப்பட்டன.
கல்லுாரியின் பாதுகாப்பு அறையில் அடுக்கி வைக்கப்பட்டு, அறை பூட்டி 'சீல்' வைக்கப்பட்டது.
மேலும் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் அறைக்குள் மற்றும் வெளியே 15 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.-
* சூலுார் சட்டசபை தொகுதியில், 332 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. அதற்காக, 430 வி.வி., பேட் இயந்திரங்களும், 398 கன்ட்ரோல் யூனிட், 398 பேலட் யூனிட் இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டன.
இதில், 98 வி.வி.பேட் இயந்திரங்கள், 66 கன்ட்ரோல் மற்றும் பேலட் யூனிட் இயந்திரங்கள் இருப்பில் வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
சூலுார் கொண்டு வரப்பட்ட இயந்திரங்கள், மார்க்கெட் ரோட்டில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன.
ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள சமுதாய நலக்கூடத்துக்கு, துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சுற்றிலும், 10க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுகிறது.
உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் இளவரசி, சூலுார் தாசில்தார் தனசேகர், தேர்தல் பிரிவு துணை தாசில்தார் சேகர் ஆகியோர் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் அறைக்கு 'சீல்' வைத்தனர்.

