/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வந்தாச்சு! இரு தொகுதிக்கு பொள்ளாச்சியில் இருப்பு வைப்பு
/
ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வந்தாச்சு! இரு தொகுதிக்கு பொள்ளாச்சியில் இருப்பு வைப்பு
ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வந்தாச்சு! இரு தொகுதிக்கு பொள்ளாச்சியில் இருப்பு வைப்பு
ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வந்தாச்சு! இரு தொகுதிக்கு பொள்ளாச்சியில் இருப்பு வைப்பு
ADDED : மார் 21, 2024 11:01 AM

பொள்ளாச்சி:பொள்ளாச்சி, வால்பாறை சட்டசபை தொகுதிகளுக்கான, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் மற்றும் 'விவி - பேட்' இயந்திரம் கொண்டு வரப்பட்டு, பொள்ளாச்சி என்.ஜி.எம்., கல்லுாரியில் இருப்பு வைக்கப்பட்டு உள்ளன.
பொள்ளாச்சி லோக்சபா தொகுதியில், பொள்ளாச்சி, உடுமலை, மடத்துக்குளம், வால்பாறை, கிணத்துக்கடவு மற்றும் தொண்டாமுத்துார் சட்டசபை தொகுதிகள் உள்ளன. லோக்சபா தொகுதியில், ஆண்கள், 7,66,077, பெண்கள், 8,15,428 மற்றும் மூன்றாம் பாலினத்தவர்கள், 290 என, மொத்தம், 15 லட்சத்து, 81 ஆயிரத்து, 795 வாக்காளர்கள் உள்ளனர்.
நகரப்பகுதியில், 821, கிராமப்புற பகுதியில், 880 என மொத்தம், 1,701 ஓட்டுச்சாவடிகள் உள்ளன.
இந்த ஓட்டுச்சாவடிகளில் போதுமான வசதிகள் மேம்படுத்த அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.இந்நிலையில், பொள்ளாச்சி லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட, பொள்ளாச்சி, வால்பாறை சட்டசபை தொகுதிகளுக்கு தேவையான, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் மற்றும் 'விவி பேட்' இயந்திரம் கொண்டு வரப்பட்டு, பொள்ளாச்சி என்.ஜி.எம்., கல்லுாரியில் இருப்பு வைக்கப்பட்டு உள்ளன.
இயந்திரங்கள் கொண்டு வரப்பட்ட வாகனங்கள், அரசியல் கட்சியினர் முன்னிலையில் திறக்கப்பட்டு, இருப்பு அறைகளுக்கு பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டன. உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கேத்திரின் சரண்யா, டி.எஸ்.பி., ஜெயச்சந்திரன் ஆகியோர், அரசியல் கட்சியினர் முன்னிலையில் இருப்பு அறைக்கு 'சீல்' வைத்தனர். அதன்பின், கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபட்டனர்.
வால்பாறை
வால்பாறை தொகுதிக்கு உட்பட்ட இயந்திரங்களும், பொள்ளாச்சி என்.ஜி.எம்., கல்லுாரியில் இருப்பு வைக்கப்பட்டன. தேர்தல் நடத்தும் அலுவலர் நிறைமதி மற்றும் அதிகாரிகள், அரசியல் கட்சியினர் முன்னிலையில், இயந்திரங்கள் வைக்கப்பட்ட அறைக்கு 'சீல்' வைத்தனர்.
தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறுகையில், 'பொள்ளாச்சி தொகுதிக்கு தேவையான மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், 33 பெட்டிகளில் கொண்டு வரப்பட்டன. மொத்தம், 325 கன்ட்ரோல் யூனிட், 325 பேலட் யூனிட் மற்றும், 351 விவிபேட் இயந்திரங்கள் கொண்டு வந்து இருப்பு வைக்கப்பட்டுள்ளன. ஒரே ஒரு விவி பேட் இயந்திரம் மட்டும் வர வேண்டும்.
தற்போது, 13 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, ஒரு எஸ்.ஐ., நான்கு போலீசார் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
வால்பாறை தொகுதிக்கு, 285 கன்ட்ரோல் யூனிட், 285 பேலட் யூனிட், 308 'விவி பேட்' இயந்திரங்கள் வந்துள்ளன,' என்றனர்.

