/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மின் ஊழியர்கள் 9ல் காத்திருப்பு போராட்டம்
/
மின் ஊழியர்கள் 9ல் காத்திருப்பு போராட்டம்
ADDED : ஜூலை 05, 2024 02:44 AM
கோவை:மின்வாரிய ஊழியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில், மாநிலம் தழுவிய தொடர் காத்திருப்பு போராட்டம், வரும் 9ம் தேதி நடக்கிறது.
மின்வாரியத்தை பல கூறுகளாக பிரித்து தனியார் மையப்படுத்தும் நடவடிக்கையை கைவிட வேண்டும். 33 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆரம்ப நிலை காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். பணியாளர்களுக்கு, காலதாமதம் இல்லாமல் பணப்பயன்கள் வழங்க வேண்டும். அரசு ஊழியர்கள் பெறுகின்ற குடும்ப நல நிதியான 5 லட்சத்தை, மின்வாரியத்திலும் அமல்படுத்த வேண்டும்.
கணக்கீட்டு பிரிவில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஒப்பந்த ஊழியர்கள் மற்றும் பகுதி நேர ஊழியர்களை அடையாளம் கண்டு பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உட்பட, 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் 9ம் தேதி போராட்டம் நடத்தப்படுகிறது.
தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் கோவை கிளைகள் சார்பில், கோவை டாடாபாத் தலைமை பொறியாளர் அலுவலகம் முன், காலை 9:00 மணி முதல் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தப்படுகிறது.