/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
உண்மை தெரிஞ்சாகணும்! 11 ஆண்டாக தவிக்கும் மக்கள்
/
உண்மை தெரிஞ்சாகணும்! 11 ஆண்டாக தவிக்கும் மக்கள்
ADDED : ஆக 06, 2024 11:44 PM
அன்னுார் : பத்திரப்பதிவு செய்ய முடியாமல், 11 ஆண்டுகளாக தவிப்பதாக கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
கரியாம்பாளையத்தில், நேற்று, 'மக்களுடன் முதல்வர்' முகாம் நடந்தது. இந்த முகாமில், பிள்ளையப்பம்பாளையம் ஊராட்சி, தொட்டியனுார் கிராமத்தைச் சேர்ந்த வார்டு உறுப்பினர் ரங்கநாதன் மற்றும் பொதுமக்கள் 50 பேர், அன்னுார் தாசில்தார் குமரி ஆனந்தனிடம் அளித்த கோரிக்கை மனு:
பிள்ளையப்பம் பாளையம் ஊராட்சி, தொட்டியனூர் கிராமத்தில், நத்தம் வகைப்பாட்டு நிலம், ஆறு ஏக்கர், 80 சென்டில், பொதுமக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது. இதில், பொதுமக்கள் வீடு கட்டி, வீட்டு வரி, மின் கட்டணம் மற்றும் குடிநீர் கட்டணம் செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், 2013ம் ஆண்டு இந்த நிலம் இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமானது என்று தவறுதலாக சேர்க்கப்பட்டு விட்டது. இதனால் இங்குள்ள, 150 குடும்பங்களும், தாங்கள் பல ஆண்டுகளாக குடியிருக்கும் வீட்டை தங்கள் வாரிசுகளுக்கு மாற்றம் செய்ய முடியவில்லை; விற்க முடியவில்லை. அடமானம் செய்து கடன் பெற முடியவில்லை.
பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு சென்றால், பதிவு செய்ய மறுக்கின்றனர். இதனால், 11 ஆண்டுகளாக, 150 குடும்பங்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளோம். பத்திரப்பதிவு செய்ய உள்ள தடையை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.