/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'குரங்கு பெடல்' பார்க்க... குழந்தைகளே ரெடியா இருங்க!
/
'குரங்கு பெடல்' பார்க்க... குழந்தைகளே ரெடியா இருங்க!
'குரங்கு பெடல்' பார்க்க... குழந்தைகளே ரெடியா இருங்க!
'குரங்கு பெடல்' பார்க்க... குழந்தைகளே ரெடியா இருங்க!
ADDED : ஏப் 28, 2024 01:00 AM

இயக்குனர் கமலக்கண்ணன் இயக்கிய மதுபானக்கடை திரைப்படத்தை, பார்த்தவர்களால் அவ்வளவு சீக்கிரம் மறந்து விட முடியாது. அப்படிப்பட்ட ஒரு கதை.
ரசிகர்கள் வெகுவாக பாராட்டினர். அடுத்து இவரின் படைப்பில் உருவான படம் 'வட்டம்'. சிபிராஜ் நடித்திருந்தார். கொரோனா காலகட்டத்தில், ரசிகர்கள் அதிகமாக தியேட்டருக்கு வராத சூழலில், ஓ.டி.டி., தளத்தில் வெளியிடப்பட்டது.
தற்போது, இவரது அடுத்த படைப்பான 'குரங்கு பெடல்', எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கிறது. மே 3ம் தேதி, தியேட்டரில் வெளியிடப்படுகிறது.
இயக்குனர் கமலக்கண்ணனிடம் பேசினோம்...
''நமக்கு ஈரோடு மாவட்டம்தான் சொந்த ஊர். சினிமா மீது ஏற்பட்ட ஆர்வத்தால், நிறைய படங்களை பார்க்க ஆரம்பித்தேன். அந்த காலகட்டத்தில் வந்த 'ஹே ராம்', 'முதல்வன்' ஆகிய படங்களை பார்த்த பின், நானும் ஒரு படைப்பாளி ஆக வேண்டும் என்ற உந்துதல் ஏற்பட்டது.
கோவையில் படித்துக் கொண்டிருந்த போதே, படத்தயாரிப்பு நிறுவனம் துவங்கினேன். அப்போது உருவாக்கிய அடுத்தடுத்த குறும்படங்கள், தனியார் தொலைக்காட்சியில் கிடைத்த விருது...இதெல்லாம் சேர்ந்துதான், இதோ இந்த இடத்துக்கு என்னை கொண்டு வந்திருக்கிறது,''
''சினிமா பற்றிய உங்கள் பார்வை?''
''என்னைப் பொருத்தவரை, உணர்வுப் பூர்வமான சிந்தனைகளையும், அறம் சார்ந்த விஷயத்தையும் கலை வடிவமாக கொண்டு வரும் போது, பார்வை இங்கு மாறும். அறம் சார்ந்து இருப்பதில், பார்வையாளர்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும். நாம் எடுக்கும் படம், பார்வையாளர்களுக்கு பிடிக்க வேண்டும்.
''அதென்ன குரங்கு பெடல்?''
''மதுபானக்கடை, வட்டம் வரிசையில், எனது அடுத்த படைப்பான 'குரங்கு பெடல்' படமும் பார்வையாளர்களுக்கு நிச்சயம் பிடிக்கும். இயக்குனர் ராசி அழகப்பன் எழுதிய, 'சைக்கிள்' என்ற சிறுகதையை தழுவி, நானும், பிரபாகரும் திரைக்கதை எழுதியுள்ளோம். சைக்கிள் ஓட்டத் துடிக்கும் மகனுக்கும், அவரது தந்தைக்கும் இடையேயான பிணைப்பை சொல்லும் படம் இது,''
''இன்ட்ரஸ்டிங்கா இருக்கே...டீட்டெயில்ஸ் ப்ளீஸ்...?
''1980-90களில் அரைபெடல் போட்டு, சிறுவர்கள் சைக்கிள் கற்றுக் கொள்வது வழக்கம். அதைப் பற்றி பேசும் படம் இது. இக்கால சிறுவர்களுக்கு அரை பெடல் அனுபவம் கிடைப்பதில்லை.
இந்த படத்தை பார்க்கும், சிறுவர்களுக்கு இது புது அனுபவமாக கிடைக்கும். பெரியவர்களுக்கும், அவர்களின் பழங்காலத்துக்கு அழைத்து செல்லும் என்பது மட்டும் உறுதி. மே 3ம் தேதி படத்தை பார்த்து விட்டு சொல்லுங்கள்.''
நடிகர் சிவகார்த்திகேயன் இந்த படத்தை பார்த்து விட்டு, கமலக்கண்ணன் உட்பட குழுவினரை பாராட்டி, படத்தை அவரே வெளியிட இருப்பது, மேலும் எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்திருக்கிறது.
பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், குழந்தைகளோடு இப்படத்தை பார்க்க, தயாராகுங்க பெற்றோரே...!

