/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'முதல்வரே' கவனியுங்க! 'முதல்வர் கோப்பை' விளையாட்டில் பரிதவிப்பு; வீரர், வீராங்கனைகளுக்கு வசதிகள் குறைபாடு
/
'முதல்வரே' கவனியுங்க! 'முதல்வர் கோப்பை' விளையாட்டில் பரிதவிப்பு; வீரர், வீராங்கனைகளுக்கு வசதிகள் குறைபாடு
'முதல்வரே' கவனியுங்க! 'முதல்வர் கோப்பை' விளையாட்டில் பரிதவிப்பு; வீரர், வீராங்கனைகளுக்கு வசதிகள் குறைபாடு
'முதல்வரே' கவனியுங்க! 'முதல்வர் கோப்பை' விளையாட்டில் பரிதவிப்பு; வீரர், வீராங்கனைகளுக்கு வசதிகள் குறைபாடு
ADDED : செப் 15, 2024 11:58 PM
கோவை : முதல்வர் கோப்பைக்கான போட்டிகளில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகள் உணவு உள்ளிட்ட வசதிகளுக்காக பரிதவிப்பதால் வரும் ஆண்டுகளில் இந்த வசதிகளை ஏற்படுத்தித்தர கோரிக்கை எகிறியுள்ளது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மாநிலம் முழுவதும் 'முதல்வர் கோப்பை' விளையாட்டு போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்படுகின்றன. கோவை மாவட்டத்தில் கடந்த, 10ம் தேதி இப்போட்டிகள் துவங்கி வரும், 19ம் தேதி வரை நடக்கின்றன.
கல்லுாரி மாணவர்கள், 16 ஆயிரத்து, 809 பேரும், பள்ளி மாணவர்கள், 18 ஆயிரத்து, 679 பேர், அரசு ஊழியர்கள், 1,449 பேர், பொதுப்பிரிவில், 2,167 பேர், மாற்றுத்திறனாளிகள், 657 பேர் என, 39 ஆயிரத்து, 738 பேர் இணையதளத்தில் பதிவு செய்துள்ளனர்.
உணவு வசதிகள்
தடகள போட்டிகள் நேரு ஸ்டேடியத்திலும், இறகுப்பந்து, ஆண்களுக்கு கால்பந்து போட்டிகள் பாரதியார் பல்கலையிலும் நடந்தது. தவிர, கபாடி, சிலம்பம், செஸ் உள்ளிட்ட போட்டிகள் தனியார் கல்லுாரிகளிலும் நடந்துவருகின்றன.
போட்டிகள் அனைத்தும் காலை, 7:00 மணி முதலே நடப்பதால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வருவோர் அதிகாலையிலேயே புறப்பட வேண்டியுள்ளது. ஆனால், அவர்களுக்கான உணவு வசதிகள் அரசால் ஏற்படுத்தப்படவில்லை.
'முதல்வர் கோப்பை' என்று முதல்வர் பெயரில் விளையாட்டு போட்டிகள் நடத்தப்படும் நிலையில், ஆரோக்கியத்துக்கு முக்கியமான உணவுக்காக வீரர்கள் பரிதவிக்கின்றனர்.
உதாரணத்துக்கு, பாரதியார் பல்கலையில் விளையாடும் வீரர், வீராங்கனைகளுக்கு வெளியே சென்றுதான் உணவு அருந்தவேண்டியுள்ளது.
அதேபோல், போக்குவரத்துக்கும் வெளியூர்களில் இருந்து வருவோர் அடித்து பிடித்து வரவேண்டியுள்ளது. கால்பந்து போன்ற போட்டிகள் குலுக்கல் முறையில் எதிரணிகளை அன்றைய காலையில் தேர்வு செய்துள்ளனர்.
ஒரு நாளைக்கு முன்பே 'டீம் பிக்சர்' போட்டிருந்தால் அனைத்து அணிகளும் அவசரமாக வந்திருக்க வேண்டியதில்லை. இதுபோன்ற பிரச்னைகளை வீரர், வீராங்கனைகள் சந்திப்பதால் வரும் காலங்களில் இவற்றுக்கு தீர்வு காண வேண்டியது அரசின் கடமை.
அலைச்சல் குறையும்
பள்ளி உடற்கல்வி ஆசிரியர்கள் சிலர் கூறியாவது:
அரசு நடத்தும் விளையாட்டு போட்டியில் உணவின்றி வீரர், வீராங்கனைகள் தவிக்கின்றனர்.
கல்லுாரிகளில் இருக்கும் கேன்டீன்களில் வாங்கி சாப்பிடும் நிலை உள்ளது. பாரதியார் பல்கலையில் வெளியே வந்து உணவு வாங்க வேண்டும். அதற்குள் விளையாட்டு போட்டிகளுக்கு அழைப்பு வந்துவிடுமோ என்ற பயம் வேறு.
ஏழை மாணவர்கள் பயிலும் அரசு பள்ளி மாணவர் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்கின்றனர். வெளியூர்களில் இருந்து வருவோருக்கு இரண்டு, மூன்று பள்ளிகளுக்கு ஒரு வாகனம் போன்ற வசதிகள் இருந்தால் அலைச்சல் குறையும்.
அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டம் போன்றவற்றை வழங்கும் முதல்வர், வரும் ஆண்டுகளில் உணவு உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தித்தர வேண்டும்.
குறிப்பாக, அரசு பள்ளி மாணவர்களுக்கு இதனால் விளையாட்டில் 'பலம்' கிடைக்கும்.
இவ்வாறு, அவர் கூறினார்.