/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நீர் மேலாண்மை கொள்கைகள் அவசியம்
/
நீர் மேலாண்மை கொள்கைகள் அவசியம்
UPDATED : மார் 22, 2024 12:25 PM
ADDED : மார் 22, 2024 12:25 AM
கோவை:உலக தண்ணீர் தினம் மார்ச் 22ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. நடப்பாண்டில்,  'அமைதிக்கான நீர் பயன்பாடு' என்ற தலைப்பில்  உலகம் முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது.
இதுகுறித்து, தமிழ்நாடு வேளாண் பல்கலை நீர் மற்றும் புவிசார் ஆராய்ச்சி மைய இயக்குனர் பழனிவேலன் கூறியதாவது:
இந்தியா பொருளாதாரம், மக்கள் தொகை கடந்த 20 ஆண்டுகளில், பன்மடங்கு வளர்ந்துள்ளது. ஆனால், நீராதாரம் குறைந்து வருகிறது. பல்வேறு துறைகள் ஒருங்கிணைந்து  நீராதாரத்தை பாதுகாப்பதில் கரம் கோர்க்க வேண்டியது அவசியம். நீராதாரங்கள் சுருங்கி வருகின்றன; உணவு தேவைக்கான உற்பத்தியை அதிகரிக்க நவீன தொழில்நுட்ப பயன்பாடுகளை மேம்படுத்த வேண்டும்.
நாட்டின் ஒட்டுமொத்த நீராதாரத்தில், 78 சதவீதம் விவசாயத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. தொழிற்சாலைகளுக்கு 5 -8 சதவீதமும், அன்றாட தேவைகளுக்கு 6 சதவீதமும், பயன்படுத்தப்படுகிறது. நாட்டின் மொத்தத்தை ஒப்பிடுகையில், தமிழகம், 4 சதவீதம் நிலப்பரப்பும், 6 சதவீத மக்கள் தொகையை கொண்டுள்ளது. ஆனால், நீரின் ஆதாரம், 2.5 சதவீதம் மட்டுமே உள்ளது. இச்சூழலில், நீரை  பொறுப்புடனும், சிக்கனமாக, பாதுகாப்பாக பயன்படுத்தவேண்டியது அவசியம்.
தமிழகத்தில், ஒன்பது வட்டாரங்களை, மிகவும் நீராதாரம் சருங்கியதாகவும், நிலத்தடி நீர் அதிகம் உறிஞ்சப்பட்டதாகவும் கணக்கெடுக்கப்பட்டுள்ளது. இப்பகுதிகளில், நிலத்தடி நீர் அதிகரிக்க பல்வேறு தொழில்நுட்பங்களை கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்திய அளவில், தனி மனித தேவைக்கான நீர் தேவை குறைவாக உள்ளது. நீராதாரங்கள் மாசுபட்டுள்ளன, நிலத்தடி நீர் மட்டம் குறைந்துள்ளன, அன்றாட நீர் தேவை அதிகரித்துள்ளது, தொழில் நிறுவனங்கள் அதிகரிக்கின்றன என, இதுபோன்ற பல்வேறு சவால்கள் நமக்கு அச்சுறுத்தலாக உள்ளன. வேளாண்மைக்கான நீர் ஆதாரங்கள் குறைந்துவரும் சூழலில், உணவு தேவைகளையும் சமாளிப்பதும் பெரிய சவாலாகவே உள்ளன.
நீர் சேமிப்பு உத்திகளை கையாளுதல், நீர் மேலாண்மை கட்டமைப்பு அதிகளவில் உருவாக்குதல், கொள்கை முடிவுகளை மேற்கொள்ள வேண்டும். இவை அனைத்தும் மையமாக கொண்டு தமிழ்நாடு வேளாண் பல்கலை சார்பில், பல்வேறு ஆராய்ச்சிகளை முன்னெடுத்துள்ளது. அவற்றில் முக்கியமாக, 18 ஆயிரம் நீர் பாசன ஏரிகளை, 12 நாட்களுக்கு ஒரு முறை, செயற்கைகோள், டிரோன் உதவியுடன் கண்காணித்து வருகிறோம். நீரின் மேல் செல்லும் டிரோன் பயன்படுத்தி ஏரிகளில் துார் எந்த அளவு சேர்ந்துள்ளது, அதனால், நீர் சேமிப்பு திறன் எந்த அளவுக்கு குறைந்துள்ளது என்பதை கண்காணித்து வருகிறோம்.
வேளாண் பல்கலை தரப்பில், விதைப்பு, நீர் பாசனம், மழை நீர் சேமிப்பில் பல்வேறு தொழில்நுட்பங்களை கண்டறிந்துள்ளோம். தேவைப்படுவோர்  அணுகினால், வழிகாட்டுதல் வழங்கப்படும். மழை நீர் சேமிப்புக்கு அரசு, அரசு அலுவலகங்கள், தனியார் அலுவலகங்கள், பொதுமக்கள், விவசாயிகள் அனைவரும் ஒன்றிணைந்து  அதிக முக்கியத்துவம் அளிக்கவேண்டும். தண்ணீர் சேமிப்பு, பாதுகாப்பு என்பது ஒவ்வொரு வீடுகளில் இருந்து துவக்கப்படவேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.

