/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'காரமடையில் தண்ணீர் பிரச்னை தலைவிரித்தாடுகிறது'
/
'காரமடையில் தண்ணீர் பிரச்னை தலைவிரித்தாடுகிறது'
ADDED : ஆக 07, 2024 11:20 PM

மேட்டுப்பாளையம் : காரமடை நகராட்சி கூட்டத்தில் தி.மு.க.,வை சேர்ந்த நகராட்சி தலைவர் மற்றும் தி.மு.க., காங்., பா.ஜ., சி.பி.எம்., கவுன்சிலர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
காரமடை நகராட்சி கூட்டம், நகராட்சி தலைவர் உஷா தலைமையில் நேற்று நடைபெற்றது. கமிஷனர் மனோகரன் முன்னிலை வகித்தார்.
தி.மு.க., கவுன்சிலர்கள் ரங்கசாமி, அனிதா, ரவிக்குமார், அமுதவேனி, ரேவதி, தியாகராஜன், ஆகியோர் 'காரமடை நகராட்சியில், 8 நாட்கள், 10 நாட்கள் வரை தண்ணீர் வராமல் உள்ளது. தண்ணீர் பிரச்னை தலைவிரித்தாடுகிறது. இதற்கு என்ன தீர்வு,' என ஆக்ரோஷமாக தலைவர் உஷாவை நோக்கி கேள்வி எழுப்பினர்.
அதன் பின் தண்ணீர் பிரச்னையை கண்டித்து, ரேவதி மற்றும் அமுதவேணி கவுன்சிலர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.
விக்னேஷ் : (பா.ஜ.,): ஒரு வருடத்திற்கும் மேல் தண்ணீர் பிரச்னை குறித்து பேசி வருகிறோம். தண்ணீர் பற்றாக்குறை உள்ள போது, புது கனெக்சன்கள் கொடுப்பது ஏன். நகராட்சியில் மிகப்பெரிய அளவில் ஊழல் நடக்கிறது. நகராட்சிக்கு சொந்தமான காரில், தலைவரின் பெயர் எழுதப்பட்டுள்ளது. அவ்வாறு எழுத சட்டத்தில் இடம் இல்லை. பெயரை எடுக்கவில்லை என்றால், தார் பூசி அழிக்கப்படும். எனது வார்டு புறக்கணிக்கப்படுகிறது. ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் கடும் பாரபட்சம் காட்டப்படுகிறது.
குருபிரசாத்: (தி.மு.க.); இதுவரை சுமார் 734 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு, அது வெற்று தீர்மானங்களாக உள்ளன. மோட்டாரில் சேறு அடைத்துள்ளது தற்போது தான். 2 வருடங்களாக குடிநீர் பிரச்னைகளுக்கு என்ன செய்துள்ளீர்கள். எந்த வார்டில் இருந்து எங்கு தண்ணீர் போகிறது என்ற அடிப்படையே தலைவருக்கு தெரியவில்லை. பின் எப்படி தலைவர், தண்ணீர் பிரச்னையை சரி செய்வார்.
வனிதா: (அ.தி.மு.க.);எனது வார்டுக்கு பாகுபாடு பார்க்கப்படுகிறது. மோட்டார் ரிப்பேர் என்றால் யாரும் வந்து பார்ப்பது கிடையாது. பொது கழிப்பிடம் செப்டிக் டேங்கில் பிரச்னை உள்ளது.
இடித்து வேறு கட்ட வேண்டும் என இரண்டு வருடங்களாக போராடி வருகிறேன். ஆனால் அந்த செப்டிக் டேங்க் மீது டைல்ஸ் ஒட்டி, பெயின்ட் அடித்து ரூ.2 லட்சம் செலவு கணக்கு காண்பிக்கப்பட்டுள்ளது.
பிரியா:(சி.பி.எம்.); காரமடையில் முதலாம் குடிநீர் திட்டத்திற்கு, ரூ.22 கோடிக்கு டேங்குகள், கட்ட தீர்மானம் நிறைவேற்றியும், தண்ணீர் டேங்குகள் கட்டப்படவில்லை.
குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை ஏன் என நகராட்சி நிர்வாகத்திடம் கேட்டால், பவானி ஆற்றில் வெள்ளம் போய் கொண்டிருக்கும் நிலையில், 'ஆற்றில் தண்ணீர் இல்லை' என சொல்கின்றனர். இது நியாமா, என்றார்.
ராமுகுட்டி:(தி.மு.க.); தண்ணீர் டேங்குகள் அதிக படியாக கட்ட வேண்டும். அதிகாரிகளிடம் வேலை வாங்க வேண்டும். அதிகாரிகள் வேலை செய்யவில்லை என தலைவர் காரணம் சொல்லக்கூடாது.
தலைவர் உஷா பேசுகையில், மோட்டார்களில் சேறு அடைத்து கொண்டது. அதனால் தான் ரிப்பேர் ஆனது. தலைவருக்கு யாரும் மரியாதை கொடுப்பது இல்லை. கவுன்சிலர்கள் என்னிடம் எந்த பிரச்னைகள் குறித்தும் தெரிவிப்பது கிடையாது. எல்லாரும் கேம் ஆடுறீங்க, என்றார்.
பின், தண்ணீர் பிரச்னை குறித்து பேசிய தி.மு.க. கவுன்சிலர்கள், சி.பி.எம். கவுன்சிலர் உள்ளிட்டோர் தலைவரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கூச்சல் போட்டனர். இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.