/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆலாம்பாளையம் குளத்துக்கு நீர் வழங்கணும்! விவசாயிகள் வலியுறுத்தல்
/
ஆலாம்பாளையம் குளத்துக்கு நீர் வழங்கணும்! விவசாயிகள் வலியுறுத்தல்
ஆலாம்பாளையம் குளத்துக்கு நீர் வழங்கணும்! விவசாயிகள் வலியுறுத்தல்
ஆலாம்பாளையம் குளத்துக்கு நீர் வழங்கணும்! விவசாயிகள் வலியுறுத்தல்
ADDED : ஆக 26, 2024 01:30 AM
உடுமலை;பி.ஏ.பி.,திட்ட தொகுப்பு அணைகள் நிரம்பியுள்ள நிலையில், திருமூர்த்தி அணையிலிருந்து, வறண்டு காணப்படும் உடுமலை, ஆலாம்பாளையம் குளத்திற்கு நீர் வழங்க வேண்டும், என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
உடுமலை அருகேயுள்ள ஆலாம்பாளையத்தில், 76 ஏக்கர் பரப்பளவில் பூசாரிநாயக்கன் குளம் அமைந்துள்ளது. 10 அடி நீர்மட்டமும், 24.67 மில்லியன் கனஅடி நீர் கொள்ளவும் கொண்டதாகும். இக்குளம், சுற்றுப்புறத்திலுள்ள, 15க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும், பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களில் உள்ள கிணறு, போர்வெல்களுக்கு நிலத்தடி நீர்மட்ட ஆதாரமாகவும் உள்ளது. நேரடியாக, 88.56 ஏக்கர் நிலங்கள் பயன்பெற்று வருகின்றன.
திருமூர்த்தி அணை கட்டப்படுவதற்கு முன், பாலாற்றின் வாயிலாக, இக்குளத்திற்கு நீர் வரத்து இருந்தது. அணை கட்டப்பட்டு, ஏழு குளங்களுக்கு தளி கால்வாய் வழியாக நீர் வழங்கிய நிலையில், பழைய ஆயக்கட்டு பாசன பகுதியான இக்குளம் விடுபட்டது.
இதனையடுத்து, விவசாயிகள் பல ஆண்டு கோரிக்கை, அரசு மற்றும் உயர்நீதிமன்ற உத்தரவுகள் அடிப்படையில், ஏழு குளங்களுடன், பூசாரிநாயக்கன் குளமும் சேர்க்கப்பட்டது. இக்குளங்களுக்கு பழைய ஆயக்கட்டு பாசனத்தின் வாயிலாக, பி.ஏ.பி., மானுப்பட்டி கிளைக்கால்வாயில், கி.மீ., 2.65ல் உள்ள மடை வாயிலாக குளத்திற்கு நீர் வழங்கப்பட்டு வந்தது.
கடந்தாண்டு ஏற்பட்ட வறட்சி மற்றும் நிர்வாக குளறுபடி காரணமாக, இக்குளத்திற்கு நீர் வழங்கவில்லை. குளம் அமைந்துள்ள பகுதிகளிலும், போதிய மழை பெய்யாத நிலையில், மூன்று ஆண்டாக குளம் வறண்டு காணப்படுவதோடு, சுற்றுப்புற கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடும், நிலத்தடி நீர்மட்டம் பாதித்து தென்னை உள்ளிட்ட நிலைப்பயிர்களும் காய்ந்து வருகிறது.
இந்நிலையில், பி.ஏ.பி., திட்ட தொகுப்பு அணைகள், தென்மேற்கு பருவமழை காரணமாக நிரம்பி, உபரி நீர் வெளியேற்றப்பட்ட நிலையில், திருமூர்த்தி அணையிலும் திருப்தியான நீர் இருப்பு உள்ளது.
பாரம்பரிய உரிமை அடிப்படையில், ஆலாம்பாளையம் குளத்திற்கு நீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என, விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.