/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வனவிலங்குகளுக்கு தண்ணீர் தொட்டிகளை சீரமைக்க வேண்டும்
/
வனவிலங்குகளுக்கு தண்ணீர் தொட்டிகளை சீரமைக்க வேண்டும்
வனவிலங்குகளுக்கு தண்ணீர் தொட்டிகளை சீரமைக்க வேண்டும்
வனவிலங்குகளுக்கு தண்ணீர் தொட்டிகளை சீரமைக்க வேண்டும்
ADDED : மார் 14, 2025 11:04 PM
பெ.நா.பாளையம்; கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் வனப்பகுதிகளில், வன விலங்குகளுக்காக கட்டப்பட்டுள்ள தண்ணீர் தொட்டிகளில் போதுமான அளவு தண்ணீரை நிரப்பி வைக்க, வனத்துறையினர் தொடர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, வனவிலங்கு ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை வனக்கோட்டத்துக்கு உட்பட்ட கோவை, போளுவாம்பட்டி, மதுக்கரை, பெரியநாயக்கன்பாளையம், காரமடை, சிறுமுகை, மேட்டுப்பாளையம் என, 7 வனச்சரகங்களில், 62 தண்ணீர் தொட்டிகள் உள்ளன. இங்கு யானை, புலி, சிறுத்தை, காட்டு மாடு, மான், கரடி, காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் ஏராளமாக உள்ளன.கோடை காலம் தொடங்கி உள்ள நிலையில், வனப்பகுதிகளில் உள்ள நீரோடைகள், குளங்கள், சிற்றோடைகள் ஆகியவை நீரின்றி வறண்டு போகும் நிலை ஏற்படலாம்.
வனவிலங்குகள் தண்ணீர் தேவைக்காக அவை வனப்பகுதியில் இருந்து வெளியே வருவதை தடுக்க, மலையோர கிராமங்களில் தண்ணீர் தொட்டிகளை வனத்துறையினர், 8 அடி நீளம், 2 அடி ஆழம், 3 அடி அகலத்தில் கட்டி வைத்துள்ளனர்.
கோடை காலங்களில் லாரிகள் வாயிலாகவும், தொட்டிகளின் அருகே உள்ள ஆழ்குழாய் கிணறுகள் மூலமாகவும், தொட்டிகளில் வனத்துறையினர் தண்ணீரை நிரப்பி வைப்பர். வனவிலங்குகள் அதனை குடிக்கவும், குளிக்கவும் பயன்படுத்திக் கொள்ளும். ஆனால், பெரும்பாலான தண்ணீர் தொட்டிகள் போதுமான பராமரிப்பு இல்லாததால், அவை பாசி படிந்து, குப்பைகள் மண்டி கிடைக்கின்றன. பல தொட்டிகள் பிளந்து கிடக்கின்றன. இதனால் தொட்டிகளில் தண்ணீர் நிரப்ப முடியாத சூழல் உள்ளது.
இது குறித்து, வனவிலங்கு ஆர்வலர்கள் கூறுகையில், 'கோவை வனக்கோட்டத்துக்கு உட்பட்ட ஏழு வனச்சரகங்களில் உள்ள, 62 வனவிலங்குகளுக்கான தண்ணீர் தொட்டிகளை உடனடியாக பராமரித்து, சரிப்படுத்தி, பழுது நீக்கி தண்ணீர் நிரப்ப வேண்டும். அவற்றை குறிப்பிட்ட கால இடைவெளியில், தண்ணீரின் துாய்மை தன்மையை வனத்துறையினர் கண்காணிக்க வேண்டும். வனவிலங்குகளுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கொண்ட மூலிகை கட்டிகளை தொட்டிகளுக்கு அருகே வைக்க வேண்டும்' என்றனர்.
இது குறித்து, வனத்துறையினர் கூறுகையில், 'வனப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நீர்த்தேக்க தொட்டிகளில், 15 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் நிரப்புகிறோம். தொட்டிகள் சிறிய மற்றும் பெரிய விலங்குகள் நீர் அருந்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.
பழுதடைந்த தண்ணீர் தொட்டிகளை விரைந்து செப்பனிட்டு, வன விலங்குகள் தண்ணீர் அருந்த ஏதுவாக மாற்றி அமைக்கும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.