சுற்றுச்சூழல் பிரச்னைகளுக்கு தீர்வு தரும் நலவாழ்வு சார்ந்த கட்டட வடிவமைப்புகள்
சுற்றுச்சூழல் பிரச்னைகளுக்கு தீர்வு தரும் நலவாழ்வு சார்ந்த கட்டட வடிவமைப்புகள்
ADDED : ஜூலை 03, 2026 04:10 PM
நகர வளர்ச்சி வேகமாக உயர்ந்துள்ளது. அதேசமயம், மாசு, அதிக மின்சார பயன்பாடு, நீர் பற்றாக்குறை மற்றும் மனஅழுத்தம் நிறைந்த வாழ்க்கை போன்ற சவால்களையும் உருவாக்கியுள்ளது.
இதற்கான தீர்வாக நலவாழ்வு சார்ந்த வடிவமைப்புகள் முக்கிய பங்கு வகிக்கின்றன என்கிறார், கோவை மண்டல கட்டட பொறியாளர் சங்க உறுப்பினர் சத்தியமூர்த்தி.
அவர் கூறியதாவது:
இயற்கை காற்றோட்டம், வெளிச்சம், மழைநீர் சேகரிப்பு, சூரிய ஆற்றல் பயன்பாடு மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்கள் இன்று அவசியங்களாக மாறிவிட்டன.
அதே நேரத்தில், கட்டடத்துறையில் நலவாழ்வு என்ற கருத்தும் முக்கியத்துவம் பெறுகிறது. இயற்கை வெளிச்சம், பசுமை சூழல், துாய காற்று மற்றும் உற்பத்தித் திறன் மற்றும் மகிழ்ச்சியை மேம்படுத்துகின்றன.
வீடு, அலுவலகம், பள்ளி அல்லது மருத்துவமனை எதுவாக இருந்தாலும், நாம் வாழும் சூழல் நமது உடல் மற்றும் மனநலத்தில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது. கொரோனா தொற்றுக்கு பிறகு மக்கள் உள்ளக வாழ்விடங்களை பற்றிய பார்வையை மாற்றிக்கொண்டுள்ளனர்.
நல்ல காற்றோட்டம் மற்றும் ஆரோக்கியமான சூழலின் முக்கியத்துவத்தை குடும்பங்கள் புரிந்துகொண்டுள்ளன. பணியாளர்களும் நலவாழ்வை முன்னிலைப்படுத்தும் பணியிடங்களை விரும்புகின்றனர்.
இதனால் கட்டட வடிவமைப்பாளர்கள் மற்றும் நிறுவனங்கள் சுற்றுச்சூழல் அக்கறையுள்ள அணுகுமுறைகளுக்கு மாறி வருகின்றனர்.
மரங்கள் நடுதல், கழிவு குறைத்தல், நீரை சேமித்தல், நீண்டநாள் பயன்படும் பொருட்களை தேர்வு செய்தல் மற்றும் இயற்கை காற்றோட்டத்தை அதிகப்படுத்துதல் போன்ற எளிய நடவடிக்கைகளால் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.
இவ்வாறு, அவர் கூறினார்.
