sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கோவை மக்களின் தேவை, எதிர்பார்ப்பு என்ன? நிறைவேற்றி தருவாரா முதல்வர் ஸ்டாலின்

/

கோவை மக்களின் தேவை, எதிர்பார்ப்பு என்ன? நிறைவேற்றி தருவாரா முதல்வர் ஸ்டாலின்

கோவை மக்களின் தேவை, எதிர்பார்ப்பு என்ன? நிறைவேற்றி தருவாரா முதல்வர் ஸ்டாலின்

கோவை மக்களின் தேவை, எதிர்பார்ப்பு என்ன? நிறைவேற்றி தருவாரா முதல்வர் ஸ்டாலின்


ADDED : ஆக 09, 2024 02:00 AM

Google News

ADDED : ஆக 09, 2024 02:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை;கோவையின் வளர்ச்சிக்காக... கோவை மக்களுக்காக பல்வேறு திட்டங்களை வகுத்து தமிழக அரசு நிறைவேற்றி வருகிறது. இருந்தாலும், இன்னும் பல்வேறு திட்டங்கள், கோரிக்கைகள் கோவை மக்கள், விவசாயிகள் மற்றும் தொழில்துறையினரிடம் இருக்கிறது. இவற்றையும் தமிழக அரசு நிறைவேற்றிக் கொடுக்க வேண்டியது, காலத்தின் கட்டாயமாக உள்ளது.

முதல்வர் ஸ்டாலின், கோவை மீது தனி பாசம் வைத்திருக்கிறார். ஒவ்வொரு முறை வரும்போதும், சிறப்பு திட்டங்கள் அறிவித்து, நிதி ஒதுக்குகிறார். உள்ளாட்சித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறைகள் வாயிலாக, சாலை சீரமைப்பு பணிகளுக்கு மட்டும், 1,000 கோடி ரூபாய் வரை ஒதுக்கியுள்ளார்.

செம்மொழி பூங்கா திட்டத்துக்கு நிதி ஒதுக்கி, பணிகள் நடந்து வருகிறது. 33 வகையான தோட்டங்கள் இவ்வளாகத்தில் உருவாக்கப்படும் என முதல்வர் உறுதி அளித்திருக்கிறார். இத்திட்டம் செயல்பாட்டுக்கு வரும்போது, கோவை மக்களுக்கு மிகச்சிறந்த பொழுதுபோக்கு இடமாக மாறும்.

அடுத்த கட்டமாக, சர்வதேச கிரிக்கெட் மைதானம், கலைஞர் நுாலகம் உள்ளிட்ட திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மெட்ரோ ரயில் திட்டத்துக்கு நிதியுதவி பெறவும், மத்திய அரசின் அனுமதி பெறவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இருந்தபோதிலும், இன்னும் பல்வேறு திட்டங்களை கோவை மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

அவை என்னென்ன...

கட்டட வரைபட அனுமதி கட்டண சலுகை அவசியம்


சொந்த வீடு கட்ட வேண்டும் என்பது ஒவ்வொரு தனி மனிதனின் கனவு. சம்பாதிக்கும் பணத்தை சிறுக சிறுக சேமித்து, நிலத்தை வாங்கி, வீடு கட்டுவதற்குள் அவர்கள் படும் கஷ்டம் கொஞ்ச நஞ்சமல்ல. இதில், வரைபட அனுமதி பெறுவதற்கு உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடையாய் நடக்க வேண்டியிருக்கிறது.

இதற்கு தீர்வு காணும் வகையில், 2,500 சதுரடி வரையிலான மனையில், 3,500 சதுரடி வரையிலான வீடு கட்டுவதற்கு சுயசான்று அடிப்படையில் 'ஆன்லைன்' முறையில் அனுமதி வழங்கும் திட்டம், சமீபத்தில் துவக்கி வைக்கப்பட்டது. கோவையில் இதற்கு முன் வரைபட அனுமதி பெற சதுரடிக்கு, 44 ரூபாய் கட்டணம் இருந்தது; இப்போது, 88 ரூபாயாக உயர்த்தப்பட்டு இருக்கிறது.

கட்டணம் இரட்டிப்பாக உயர்த்திருப்பதால், வீடு மற்றும் கட்டடம் கட்டுவோர் அதிர்ச்சி அடைந்திருக்கின்றனர். அதனால், கட்டண சலுகை வழங்க வேண்டும் என்பது கட்டுமான துறையினர் எதிர்பார்ப்பு.

'தட்கல்' திட்டத்தில் விவசாய மின் இணைப்பு


வேளாண் துறையை மேம்படுத்த வேண்டும் என்பதற்காகவே, தி.மு.க., ஆட்சிக்கு வந்தபின், ஒவ்வொரு ஆண்டும் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. கோவை மாவட்ட விவசாயிகள், 'தட்கல்' திட்டத்தில் மின் இணைப்பு கேட்டு, பணம் 'டிபாசிட்' செய்து காத்திருக்கின்றனர். பல மாதங்களாக விண்ணப்பங்கள் கிடப்பில் போடப்பட்டு இருக்கின்றன.

சிறு குறு தொழில்துறையினர் கோரிக்கைகள் என்னென்ன?


சிறு, குறு தொழில்துறையினர், மின் கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி, தமிழக அரசின் கவனத்தை ஈர்க்க, பல்வேறு கட்டமாக போராடி வருகின்றனர். லோக்சபா தேர்தலுக்கு முன், முதல்வர் ஸ்டாலினை, தொழில்துறையினர் சந்தித்து முறையிட்டனர். தேர்தலுக்கு பின், தீர்வு காணப்படும் என உறுதி கூறியிருந்தார். ஆனால், இப்போது மீண்டும் மின் கட்டணம் உயர்த்தப்பட்டு இருப்பதால், அதிர்ச்சியில் உறைந்திருக்கின்றனர்.

சிறு குறு நிறுவனம் நடத்தும் ஒருவர், தனது கம்பெனியில் மின்சாரம் பயன்படுத்தினாலும், பயன்படுத்தா விட்டாலும், இரு மாதத்துக்கு ஒருமுறை நிலைக்கட்டணமாக குறிப்பிட்ட தொகை செலுத்த வேண்டும் என்பதை ரத்து செய்ய வேண்டும் என்பதே மிக முக்கியமான கோரிக்கை. மேலும், சூரிய ஒளி மின்னுற்பத்தி செய்வதற்கு கட்டமைப்பு ஏற்படுத்தினால், மின்வாரியத்துக்கு தொகை செலுத்தச் சொல்வது நியாயமாகத் தெரியவில்லை. இவர்களது கோரிக்கையை கனிவோடு பரிசீலிக்க வேண்டும் என விரும்புகின்றனர்.

மருத்துவ காப்பீடு அட்டை உச்ச வரம்பு அதிகரிக்கணும்


ஏழை எளிய மக்களுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு அளிக்கும் வகையில், தமிழக அரசால் காப்பீடு அட்டை வழங்கப்படுகிறது. இதை பெற, பயனாளியின் ஆண்டு குடும்ப வருமானம் ரூ.1.20 லட்சம் என உச்சவரம்பு வைக்கப்பட்டுள்ளது. மகளிர் உரிமைத்தொகை பெற, ஆண்டு குடும்ப வருமானம் ரூ.2.5 லட்சம் என உச்சவரம்பு வைக்கப்பட்டிருக்கிறது. இதை கருத்தில் கொண்டு, மருத்துவ காப்பீடு அட்டை வழங்குவதற்கான உச்சவரம்பை ரூ.5 லட்சம் வரை உயர்த்த வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.

உயிர் பெறுமா ஹாக்கி மைதானம்


அ.தி.மு.க., ஆட்சிக்காலத்தில், பல கோடி ரூபாய் செலவழித்து ஆர்.எஸ்.புரத்தில் சர்வதேச ஹாக்கி மைதானம் கட்டும் பணி துவக்கப்பட்டது. பல்வேறு பிரச்னைகளை சுட்டிக்காட்டி, அத்திட்டம் முடக்கப்பட்டது. தி.மு.க., ஆட்சிக்கு வந்தபின், அக்கோப்பு துாசி தட்டப்பட்டது. இருப்பினும் கூடுதல் நிதி ஒதுக்கி, ஹாக்கி மைதானம் இன்னும் உருவாக்கப்படவில்லை. இத்திட்டத்துக்கு உயிர் கொடுக்க வேண்டிய பொறுப்பு, விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதியை சேர்ந்தது. இந்த ஆட்சிக்காலத்துக்குள் ஹாக்கி மைதானம் அமைக்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு விளையாட்டு வீரர்களிடம் இருக்கிறது.

நகருக்கு வெளியே சுற்றுச்சாலை தேவை


மேற்குப்புறவழிச்சாலை திட்டத்தில் முதல் 'பேக்கேஜ்' பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. அடுத்த கட்ட பணிகள் தொடர்வதற்கு, இரண்டாவது 'பேக்கேஜ்'க்குரிய தொகையை விடுவிக்க வேண்டும். மேலும், கிழக்குப்புறவழிச்சாலை திட்டம் கோப்பு வடிவில் இருக்கிறது. தேசிய நெடுஞ்சாலைத்துறை மூலம் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து அத்திட்டத்தையும் செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். மேலும், நீலாம்பூர் - மதுக்கரை வரையிலான எல் அண்டி பை பாஸ் சாலையில், அடிக்கடி விபத்துகள் நடந்து, உயிர் பலிகள் ஏற்படுகின்றன. இதை தவிர்க்க, இச்சாலையை விரிவாக்கம் செய்வற்கான முயற்சிகளை வேகப்படுத்த வேண்டும். இச்சாலைகள் ஒரே நேரத்தில் அமைந்தால், கோவை நகருக்கு வெளியே சுற்றுச்சாலை அமையும்; நகருக்குள் போக்குவரத்து நெரிசல் குறையும்.

சிறுவாணி பிரச்னை நிரந்தர தீர்வு தேவை


சிறுவாணி அணையின் மொத்த உயரமான, 50 அடிக்கு தண்ணீர் தேக்குவது தொடர்பாக, ஒவ்வொரு ஆண்டும் பருவ மழை சமயங்களில் பிரச்னை எழுகிறது. அணையில் கசிவு ஏற்பட்டு, தினமும், 10 லட்சம் லிட்டர் தண்ணீர் வீணாவது ஆய்வில் கண்டறியப்பட்டது. கசிவை நிறுத்துவதற்கான நடவடிக்கை எடுக்க, புனேவில் உள்ள தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணைய அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். இதற்கான பணிகளை விரைவுபடுத்த வேண்டும். முந்தைய ஆண்டுகளில், 45 அடிக்கு நீர் தேக்கப்பட்டது. இப்போது, 42 அடிக்கு நீர் மட்டம் உயர்ந்தாலே, கேரள நீர்ப்பாசனத்துறையினர், மதகை திறந்து, தண்ணீரை வெளியேற்றுகின்றனர். இரு மாநில அரசு உயரதிகாரிகள் பேச்சு நடத்தி, நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டும். நீர்க்கசிவை போக்க துரித நடவடிக்கை அவசியம்.

இதுபோன்ற இன்னும் ஏராளமான திட்டங்கள் நிறைவேற்ற வேண்டியிருக்கிறது. கோவை வருகை தரும் முதல்வர் ஸ்டாலின், இவற்றையெல்லாம் நிறைவேற்றித் தருவார் என்கிற எதிர்பார்ப்பில் மக்கள் காத்திருக்கின்றனர்.






      Dinamalar
      Follow us