/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
830 வாக்காளர்களை நீக்கியதில் நடந்தது என்ன? விரைவில் வருகிறது அறிக்கை!
/
830 வாக்காளர்களை நீக்கியதில் நடந்தது என்ன? விரைவில் வருகிறது அறிக்கை!
830 வாக்காளர்களை நீக்கியதில் நடந்தது என்ன? விரைவில் வருகிறது அறிக்கை!
830 வாக்காளர்களை நீக்கியதில் நடந்தது என்ன? விரைவில் வருகிறது அறிக்கை!
ADDED : ஏப் 27, 2024 12:54 AM
கோவை;'கவுண்டம்பாளையம் தொகுதியில், ஒரே ஓட்டுச்சாவடியில், 830 வாக்காளர்கள் நீக்கப்பட்டது தொடர்பாக, ஆய்வு நடந்து வருகிறது. விரைவில் அறிக்கை தாக்கல் செய்யப்படும்' என, அத்தொகுதியின் உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி கோவிந்தன் தெரிவித்தார்.
கோவையில் லோக்சபா தேர்தல், கடந்த 19ம் தேதி நடைபெற்றது. கோவை தொகுதியில், பா..ஜ., மாநிலத் தலைவர் அண்ணாமலையே போட்டியிட்டதால், தமிழகம் முழுவதும் உற்றுநோக்கும் தொகுதியாக மாறியது.
அதற்கேற்ப, ஓய்வு இல்லாமல் அனைத்து தரப்பு மக்களையும் சந்தித்த அண்ணாமலை, கோவையின் வளர்ச்சியை மையமாக வைத்து, பிரசாரம் செய்தார்.
இந்நிலையில், வாக்காளர் பட்டியலில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக, பல ஓட்டுச்சாவடிகளில் பெயர்கள் விடுபட்டிருந்தன.
கோவை லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட கவுண்டம்பாளையம் சட்டசபை தொகுதியில், அங்கப்பா பள்ளியில் அமைக்கப்பட்ட, 214 என்ற எண்ணுள்ள ஓட்டுச்சாவடியில், 2022 உள்ளாட்சி தேர்தலில், 1,354 ஓட்டுகள் இருந்தன. இம்முறை, 2024 லோக்சபா தேர்தலில், 524 ஓட்டுகளே இருந்தன. ஒரு ஓட்டுச்சாவடியில் மட்டும், 830 ஓட்டுகள் நீக்கப்பட்டு இருந்தன.
ஓட்டுப்பதிவு நாளன்று, ஓட்டளிக்கச் சென்ற வாக்காளர்கள் பலரும் ஏமாற்றம் அடைந்தனர். அவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட தேர்தல் அதிகாரியான, கலெக்டர் கிராந்திகுமாரிடம் முறையிட்டனர். இதுதொடர்பாக விசாரித்து, அறிக்கை சமர்ப்பிக்க, உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிக்கு கலெக்டர் அறிவுறுத்தினார். ஓட்டுப்பதிவு முடிந்து ஏழு நாட்களாகியும், இன்னும் அறிக்கை தாக்கல் செய்யவில்லை. இது, தேர்தல் அலுவலர்கள் மீது, நம்பகத்தன்மை இழக்கும் செயலாக இருக்கிறது.
இதுதொடர்பாக, கவுண்டம்பாளையம் தொகுதியின் உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியான, வடக்கு கோட்டாட்சியர் கோவிந்தனிடம் கேட்டதற்கு, ''வாக்காளர்கள் நீக்கப்பட்டது தொடர்பாக, தேர்தல் அலுவலர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். இரண்டு அல்லது மூன்று நாட்களில் ஆய்வறிக்கையை, கலெக்டரிடம் சமர்ப்பிப்போம்,'' என்றார்.

