/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சிங்காநல்லுாரில் ரயிலை நிறுத்தினால் என்னவாம்? மக்கள் பிரதிநிதிகள் மவுனம் சாதிப்பது ஏன்?
/
சிங்காநல்லுாரில் ரயிலை நிறுத்தினால் என்னவாம்? மக்கள் பிரதிநிதிகள் மவுனம் சாதிப்பது ஏன்?
சிங்காநல்லுாரில் ரயிலை நிறுத்தினால் என்னவாம்? மக்கள் பிரதிநிதிகள் மவுனம் சாதிப்பது ஏன்?
சிங்காநல்லுாரில் ரயிலை நிறுத்தினால் என்னவாம்? மக்கள் பிரதிநிதிகள் மவுனம் சாதிப்பது ஏன்?
ADDED : செப் 07, 2024 01:57 AM
கோவை:சிங்காநல்லூர் ரயில் நிலையத்தில் கடந்த 4 ஆண்டுகளாக ரயில்கள் நின்று செல்வதில்லை. இதை குறிப்பிட்ட பகுதி மக்களின் பிரச்னை என்ற அளவில் மட்டுமே மக்கள் பிரதிநிதிகளும், மாவட்ட நிர்வாகமும் கையாள்வதே, இப்பிரச்னையில் தீர்வு எட்டப்படாததற்கு காரணம்.
சிங்காநல்லூர் ரயில் நிலையத்தில், கொரோனா பெருந்தொற்றுக்கு முன்பு, திருச்சி-பாலக்காடு, கோவை-நாகர்கோவில் ரயில், சேலம்-கோவை ரயில் ஆகியவை சிங்காநல்லூர் மற்றும் இருகூர் ஆகிய இரு ரயில் நிலையங்களிலும் நின்று சென்றன.
கோவிட் பெருந்தொற்று முடிந்து, சேலம் - கோவை ரயில் தவிர மற்ற இரு ரயில்களின் சேவை மீண்டும் துவக்கப்பட்டாலும், அந்த ரயில்கள் சிங்காநல்லூர் ரயில் நிலையத்தில் நின்று செல்வதில்லை.
ஹோப் காலேஜ், வரதராஜபுரம், சவுரிபாளையம், ஒலம்பஸ், வெள்ளலூர், பட்டணம் உள்ளிட்ட கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்தைச் சேர்ந்த விவசாயிகள், தொழிலாளர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் திருப்பூர், ஈரோடு, சேலம் பகுதிகளுக்குச் செல்ல, சிங்காநல்லூர் ரயில்வே ஸ்டேஷனில் ரயில்கள் நின்று செல்வது, பெரும் சாதகமாக இருந்து வந்தது.
ஆனால், கடந்த 4 ஆண்டுகளாக சிங்காநல்லூர் ரயில்வே ஸ்டேஷனில் ரயில்கள் நின்று செல்வதில்லை. இப்பிரச்னையை மக்கள் பிரதிநிதிகளும் மாவட்ட நிர்வாகமும் ஏனோதானோ என்று கையாள்வதாக, அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
விபத்துகளின் தலைநகரம்
கோவை, தமிழகத்திலேயே சாலை விபத்தால் உயிரிழப்பவர்களின் தலைநகரமாக இருக்கிறது. 2023ல், மாநிலத்திலேயே அதிக அளவாக 3,642 சாலை விபத்துகள் நடந்து, 1,046 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த எண்ணிக்கையைக் குறைக்க, பொதுப்போக்குவரத்தை அதிகரிப்பதும் ஒரு தீர்வாக முன்வைக்கப்படுகிறது. ஆனால், இது வெறும் பேச்சளவில் மட்டுமே உள்ளது.
சிங்காநல்லூர் ரயில் நிலையத்தில் ரயில்கள் நின்று சென்றால், தினமும் நூற்றுக்கணக்கானோர் பயனடைவர். இவர்கள் பொதுப்போக்குவரத்தைப் பயன்படுத்துவது அதிகரிக்கும்.
போக்குவரத்து நெரிசல் குறையும். தனி நபர் வாகனப் பயன்பாடு குறைந்தால் விபத்துகளின் எண்ணிக்கையும் குறையும். அந்த அடிப்படையில் சிங்காநல்லூர் ரயில் நிலைய பிரச்னையை அணுகினால், அதற்கு உடனடி தீர்வு கிடைக்கும்.
சிங்காநல்லூர் ரயில் பயணிகள் சங்கம் சார்பில், சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம், எம்.எல்.ஏ., எம்.பி., மத்திய இணையமைச்சர் என, பல்வேறு தரப்பில் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.
மக்கள் பிரதிநிதிகளான மேயர் ரங்கநாயகி, சிங்காநல்லூர் எம்.எல்.ஏ., ஜெயராமன், எம்.பி., ராஜ்குமார், மாவட்ட நிர்வாகம் இணைந்து, சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகத்துக்கு அழுத்தம் கொடுத்தால், இப்பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். ஆனால், அதற்கு அவர்கள் முனைப்புக் காட்டுவதில்லை என்பதே, சிங்காநல்லூர் சுற்றுப்பகுதி மக்களின் குற்றச்சாட்டாக இருக்கிறது.