/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நெல் உற்பத்தி குறைய காரணம் என்ன? 'இண்டியா' கூட்டணிக்கு அண்ணாமலை கேள்வி
/
நெல் உற்பத்தி குறைய காரணம் என்ன? 'இண்டியா' கூட்டணிக்கு அண்ணாமலை கேள்வி
நெல் உற்பத்தி குறைய காரணம் என்ன? 'இண்டியா' கூட்டணிக்கு அண்ணாமலை கேள்வி
நெல் உற்பத்தி குறைய காரணம் என்ன? 'இண்டியா' கூட்டணிக்கு அண்ணாமலை கேள்வி
ADDED : ஏப் 02, 2024 11:39 PM
கோவை:''காவிரியில் நீர் குறைந்த பிறகு, டெல்டா பகுதியில் மூன்று லட்சம் டன் நெல் உற்பத்தி குறைந்துள்ளது. இதற்கு, 'இண்டியா' கூட்டணி கட்சியினர் தான் பதில் சொல்ல வேண்டும்,'' என்று, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறினார்.
கோவை லோக்சபா தொகுதியில், பா.ஜ., கட்சி சார்பில் போட்டியிடும் அண்ணாமலை, சின்னதடாகத்தில் பிரசாரத்தின் இடையே நிருபர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
தி.மு.க.,வினர் குழந்தையை கிள்ளி விட்டு, தொட்டிலையும் ஆட்டும் குணமுடையவர்கள். பொள்ளாச்சியில் தேங்காய் நார் பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. சின்னதடாகத்தில் செங்கல் தொழில் உற்பத்தி பிரச்னைக்கும் உரிய தீர்வு காணப்படும்.
கச்சத்தீவு குறித்த பல்வேறு உண்மைகளை, பா.ஜ., வெளிக்கொண்டு வந்துள்ளது. இந்திய மீனவர்கள் கச்சத்தீவை பயன்படுத்த வேண்டும். அப்பகுதியில் தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க உரிமம் வழங்க வேண்டும் என, மத்திய அரசிடம் வலியுறுத்துவோம்.
இது, இரு நாடுகளுக்கும் இடையே உள்ள பிரச்னை. இதை எல்லா கோணங்களிலும், அணுக முயற்சி எடுக்கப்படும் என, மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார். இப்பிரச்னைக்கு விரைவில் தீர்வு கிடைக்கும் என்று நம்புகிறோம்.
காவிரியில் நீர் குறைந்த பிறகு, டெல்டா பகுதியில், மூன்று லட்சம் டன் நெல் உற்பத்தி குறைந்துள்ளது. இதற்கு 'இண்டியா' கூட்டணியினர் தான், பதில் சொல்ல வேண்டும்.
டாஸ்மாக் மதுக்கடைகளை மூட வேண்டும்; கள்ளுக்கடையை திறக்க வேண்டும். அதனால், விவசாயிகள் நன்மை அடைவார்கள் என்பதில், தெளிவாக இருக்கிறோம்.
கச்சத்தீவு நமக்கு வேண்டும் என்பது, நம் நிலைப்பாடு. அதன் வாயிலாக, தமிழக மீனவர்களின் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும். இது தொடர்பாக இலங்கைக்கு மூன்று முறை சென்று, அங்குள்ள அரசியல் பிரமுகர்கள், ஆளுங்கட்சி, எதிர்க்கட்சியினர் உள்ளிட்ட பலரை சந்தித்து பேசி இருக்கிறேன்.
இதில், இந்திய மீனவர்கள் பத்தாயிரம் பேருக்கு, கச்சத்தீவு பகுதியில் மீன் பிடிக்க உரிமம் பெறலாமா, கச்சத்தீவை தமிழக மீனவர்கள் பயன்படுத்துவதற்கு மட்டும் அனுமதி வாங்கலாமா, இல்லை கச்சத்தீவையே திரும்ப பெறலாமா என்பது குறித்து, மத்திய அமைச்சர் ஜெய்சங்கரிடம் பேசினேன். சட்டபூர்வமாக தீர்வு காண முடியுமா என்பதை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம்.
இவ்வாறு, அண்ணாமலை கூறினார்.

