/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவைக்கு என்னென்ன செய்வோம்: தி.மு.க., தேர்தல் அறிக்கை வெளியீடு
/
கோவைக்கு என்னென்ன செய்வோம்: தி.மு.க., தேர்தல் அறிக்கை வெளியீடு
கோவைக்கு என்னென்ன செய்வோம்: தி.மு.க., தேர்தல் அறிக்கை வெளியீடு
கோவைக்கு என்னென்ன செய்வோம்: தி.மு.க., தேர்தல் அறிக்கை வெளியீடு
ADDED : ஏப் 17, 2024 01:11 AM

கோவை:கோவை தொகுதிக்கு என்னென்ன செய்ய இருக்கிறோம் என பட்டியலிட்டு, தி.மு.க., சார்பில் தேர்தல் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது.
கோவை லோக்சபா தொகுதிக்கென, 'கோவை ரைசிங்' என்ற பெயரில், தி.மு.க., சார்பில் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட தேர்தல் அறிக்கை, பீளமேட்டில் உள்ள தேர்தல் பணிமனை அலுவலகத்தில் நேற்று வெளியிடப்பட்டது. அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, வேட்பாளர் கணபதி ராஜ்குமார், மாநகர் மாவட்ட செயலாளர் கார்த்திக், முன்னாள் அமைச்சர் பொங்கலுார் பழனிசாமி, தகவல் தொழில்நுட்ப அணி மாநில செயலாளர் மகேந்திரன் ஆகியோர் வெளியிட்டனர்.
அதன்பின், அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா நிருபர்களிடம் கூறியதாவது:
என்னென்ன திட்டங்கள் தேவை என பொறுப்புணர்வுடன் ஆராய்ந்து தேர்தல் அறிக்கை தயாரித்துள்ளோம். கோவைக்கு புதிய உதயம், புதிய விடியல் பிறக்கும். செங்கல் சூளைகள் விவகாரத்தில் சுற்றுச்சூழல், விவசாயிகள் பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். நீர் நிலைகளில் கழிவு நீர் கலப்பதை தடுக்க, மினி சுத்திகரிப்பு நிலையங்கள் கட்டப்படும். கோவை நகர்ப்புற வளர்ச்சி ஆணையம் அமைக்கும் பணி விரைவுபடுத்தப்படும்.எல் அண்டு டி பைபாஸ் நான்கு வழிச்சாலையாக்கும் பணிகள் விரைவுப்படுத்தப்படும்.கோவையில் இருந்து பணியாளர்கள் எளிதாக சென்று வர வசதியாக பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், பாலக்காடு, திருப்பூர் என நான்கு திசைகளிலும் மின்சார ரயில்கள் இயக்கப்படும்.
கோவையில் ஐ.ஐ.எஸ்.சி., மற்றும் ஐ.ஐ.எம்., தொடங்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும். கிரில் உற்பத்தியாளர்களுக்காக ஒரு புதிய சிட்கோ உருவாக்கப்படும். விசைத்தறி வளர்ச்சி கவுன்சில் உருவாக்கப்படும். லாலி ரோடு சந்திப்பில் மேம்பாலம் கட்டப்படும். சென்னை - கோவை - துாத்துக்குடி இடையே பிரத்யேகமாக சரக்கு வழித்தடம் ஏற்படுத்தப்படும்.
நொய்யல் ஆற்றுக்கான நீர்வழித்தடம் கண்டறியப்பட்டு, மீட்டுருவாக்கம் செய்யப்படும். சிறுவாணி, பில்லுார் அணைகள் துார்வாரப்படும். காற்றாலை உற்பத்தி சார்ந்த பிரச்னைகளுக்கு கவனம் செலுத்தக்கூடிய வகையில் புதிய கொள்கை உருவாக்கப்படும். இரண்டு புதிய பசுமை தொழில்பூங்கா ஏற்படுத்தப்படும். சூலுார் ஏரோ பார்க் திட்டம் விரைந்து முடிக்கப்படும். கோவையில் புத்தொழில் ஹப் துவக்கப்படும். எம்.எஸ்.எம்.இ., துறைக்கான தொழில்நுட்ப தடைகளை கடக்க, உலகத்தரத்தில் பின்னோக்கு பொறியியல் தொழில்நுட்ப மையம் அமைக்கப்படும். தனியார் பங்கு மற்றும் மூலதன நிதி அமைப்பு உருவாக்கி, கோவையில் நிதி மாவட்டத்தை நிறுவ முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு, அவர் கூறினார்.

