/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆட்சிக்கு வந்ததும் 30 லட்சம் பணியிடங்களை நிரப்புவோம்! காங்., முன்னாள் தலைவர் ராகுல் கோவையில் பேச்சு
/
ஆட்சிக்கு வந்ததும் 30 லட்சம் பணியிடங்களை நிரப்புவோம்! காங்., முன்னாள் தலைவர் ராகுல் கோவையில் பேச்சு
ஆட்சிக்கு வந்ததும் 30 லட்சம் பணியிடங்களை நிரப்புவோம்! காங்., முன்னாள் தலைவர் ராகுல் கோவையில் பேச்சு
ஆட்சிக்கு வந்ததும் 30 லட்சம் பணியிடங்களை நிரப்புவோம்! காங்., முன்னாள் தலைவர் ராகுல் கோவையில் பேச்சு
ADDED : ஏப் 13, 2024 01:26 AM

கோவை;''மீண்டும் ஆட்சிக்கு வந்தால், அரசியல் சட்டத்தையே மாற்றுவதற்கு பா.ஜ., தயாராகவுள்ளது!,'' என்று காங்., முன்னாள் தலைவர் ராகுல் குற்றம்சாட்டினார்.
கோவை, 'எல் அண்ட் டி' பை பாஸ் செட்டிபாளையம் பகுதியில், 'இண்டியா' கூட்டணி சார்பில் நடந்த தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில், கோவை, பொள்ளாச்சி மற்றும் கரூர் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் கணபதி ராஜ்குமார், ஈஸ்வரசாமி மற்றும் ஜோதிமணி (காங்.,) ஆகியோரை ஆதரித்து, காங்., முன்னாள் தலைவர் ராகுல் பேசியதாவது:
இந்தியாவில் இப்போது சித்தாந்த யுத்தம் நடந்து கொண்டிருக்கிறது. விரைவில் வரப்போகும் சூறாவளியில், மோடியின் அரசு துாக்கி எறியப்படவுள்ளது. விமான நிலையம், துறைமுகம், நெடுஞ்சாலை, கட்டமைப்பு வசதிகள் அனைத்தையும் அதானியிடம் இந்த அரசு கொடுத்துள்ளது.மும்பை விமான நிலையம், ஒருவரின் கையில் இருந்தது. அதானி அதை விரும்பினார்; அதை உடனே அவர் கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
அதானிஎதை விரும்பினாலும், அதை உடனே பெற முடிகிறது. இந்த அரசிடம் அதானி எப்படி பயன் பெறுகிறார் என்று லோக்சபாவில் நான் பேசியதும், என்னுடைய எம்.பி., பதவியைப் பறித்து, வெளியே துாக்கி எறிந்தார்கள்.நான் வசித்த வீட்டையும் பறித்துக் கொண்டார்கள். லட்சக்கணக்கான இந்திய மக்களின் மனங்கள் தான், நான் வாழும் வீடு.
எனக்கும், தமிழக மக்களுக்கும் இடையில் இருப்பது, அரசியல் தொடர்பு மட்டுமில்லை. அது அன்பான குடும்ப உறவாகும்.தமிழர்கள் பரந்த மனமும், உயர்ந்த நாகரீகமும் உடையவர்கள். யாரை எப்படி மதிப்பது என்பது உங்களுக்குத் தெரியும். யார் நம்மிடம் உண்மையாகப் பேசுகிறார் என்பதை நீங்கள் கேட்கும்போதே, முடிவு செய்து விடுவீர்கள்.
வேலையில்லா திண்டாட்டம்
இளைஞர்கள் வேலையின்றி இருப்பதைப் பற்றி, மோடிக்குக் கவலையில்லை; விவசாயிகள், மீனவர்கள் தற்கொலை செய்கிறார்கள். பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி.,யால் மோசமான நிலையை நாடு சந்தித்தது. ஆனால் மோடி தோசை பிடிக்கும் என்கிறார்; உங்களுக்கு தோசை மட்டுமல்ல; வடையும் பிடிக்கலாம். அதுவல்ல பிரச்னை; தமிழ்நாட்டுக்கு என்ன செய்தீர்கள் என்பதே கேள்வி.
நான் அரசியலை சுத்தப்படுத்தப்போகிறேன் என்று மோடி முதலில் சொன்னார். அதன்பின், தேர்தல் பத்திர முறையைக் கொண்டு வந்தார். அதில் யார் பணம் கொடுத்தாலும் அவர்கள் யார் என்று வெளியே தெரியாது.சில ஆண்டுகளுக்குப் பின்பு, சுப்ரீம் கோர்ட் இது சட்டவிரோதம் என்று சொன்னது. அப்போதும் பணம் கொடுத்தவர்களின் பெயர்களை வெளியிட மறுத்தார்கள்
சுப்ரீம் கோர்ட் நடவடிக்கை எடுக்கும் என்று சொன்னபின்பே, அது வெளியிடப்பட்டது. தேர்தல் பத்திரத்தில், பல ஆயிரம் கோடி, பா.ஜ.,வுக்குச் சென்றுள்ளது. பணம் கொடுத்தவர்களின் பெயர்கள், கொடுத்த தேதி, எவ்வளவு பணம் என்று எல்லாத் தகவலும் வெளியானது. அப்போது தான் மோடியைப் பற்றி எல்லாம் வெளியுலகிற்குத் தெரியவந்தது.
சி.பி.ஐ., வருமான வரித்துறை, அமலாக்கத்துறை ரெய்டுகள் நடந்து, வழக்குகள் பாய்ந்த பின்பே, அவர்கள் பணம் கொடுத்திருக்கிறார்கள். பா.ஜ.,வுக்குப் பணம் கொடுத்த பின்பு அந்த வழக்குகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன. கனிமம், நெடுஞ்சாலை, கட்டமைப்பு திட்டங்களில், கம்பெனிகளுக்கு பெரிய ஒப்பந்தங்களைத் தருகிறார்கள்; அதன்பின் சில நாட்களில் பா.ஜ.,வுக்கு அவர்கள் நிதி கொடுத்துள்ளனர்.
மோடி நாட்டுக்காக எதையும் உருப்படியாகச் செய்ததில்லை. வேலையில்லாத் திண்டாட்டம் அதிகமாகி, 83 சதவீத இளைஞர்கள் வேலையின்றி உள்ளனர்.
16 லட்சம் கோடி ரூபாய்!
எழுபது கோடி மக்களின் பணத்தை, 22 பேர் வைத்துள்ளனர். ஒரே நாளில் 30 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். மகாத்மா காந்தி வேலை உறுதித் திட்டத்துக்கான 16 லட்சம் கோடி பணத்தை, பெரும் பணக்காரர்களுக்கு வாரிக் கொடுத்துள்ளனர். நாட்டில் 30 லட்சம் பணியிடங்கள் காலியாகவுள்ளன. இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் அந்த பணியிடங்களை முதலில் நிரப்புவோம்.
எங்கள் ஆட்சி வந்ததும், நீட் தேர்வு வேண்டுமா வேண்டாமா என்பதை தமிழக மக்களே முடிவு செய்யும் நிலை ஏற்படும். தமிழக விவசாயிகள், டில்லி ஜந்தர் மந்தரில் போராடியபோது, நான் அவர்களைச் சந்தித்தேன்.
அவர்களின் விளைபொருளுக்கு சட்டப்பூர்வமாக குறைந்தபட்ச ஆதார விலை தருவதற்கு உறுதியளிக்கிறேன்.
இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால், விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்படும். மோடி-அதானி கூட்டணி அரசில், நாட்டில் மிகப்பெரிய கோடீஸ்வரர்கள், மிகவும் ஏழைகள் என இரு பிரிவு, நாட்டில் உருவாகியுள்ளது. எங்கள் ஆட்சியில், வறுமைக்குடும்பங்களை மீட்டெடுப்போம்.
வறுமையில் இருக்கும் இந்தியக் குடும்பங்களைத் தேர்ந்தெடுத்து, அவர்கள் முன்னேறும் வகையில், அந்தக் குடும்பத்திலுள்ள பெண்களுக்கு மாதத்துக்கு 8500 ரூபாய் வீதமாக ஆண்டுக்கு ஒரு லட்சம் வழங்கப்படும். ஆஷா அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஊதியம் இரட்டிப்பாக்கப்படும்.
சமூக நீதியை நிலை நாட்டும் வகையில், இட ஒதுக்கீட்டில் இருக்கும் 50 சதவீத உச்சவரம்பை நீக்குவோம். இந்தியாவில் சாதி வாரி, பொருளாதார நிலை கணக்கெடுப்பை நடத்துவோம். நாட்டின் அரசியல் சாசனம், மொழி, வரலாறு, உரிமைகள் காப்பாற்றப்படும்.
இன்றைக்கு பல பல்கலைகளின் துணை வேந்தர்கள், மாணவர்கள் என்ன படிக்க வேண்டுமென்பதை, முடிவு செய்கிறார்கள். தேர்தல் கமிஷன், சட்டத்துறையில் ஆர்.எஸ்.எஸ்., தாக்கம் அதிகரித்துள்ளது.
மீண்டும் ஆட்சிக்கு வரும்பட்சத்தில், அரசியல் சட்டத்தையே மாற்ற பா.ஜ., தயாராகவுள்ளது. இந்த நாடு பிரதமரின் சொந்தச் சொத்து இல்லை. அது நம் மக்களுக்கானது.
அதில் மோடிக்கு எந்த உரிமையும் இல்லை. நாட்டையும், அரசியல் சாசனத்தையும் பாதுகாக்க நினைப்பவர்களால், 'இண்டியா' கூட்டணி நிச்சயம் வெற்றி பெறுமென்று நான் நம்புகிறேன்.
இவ்வாறு, தலைவர் ராகுல் பேசினார்.

