/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சாயிபாபா காலனியில் மேம்பாலம் கட்டும் பணி துவங்குவது எப்போது?
/
சாயிபாபா காலனியில் மேம்பாலம் கட்டும் பணி துவங்குவது எப்போது?
சாயிபாபா காலனியில் மேம்பாலம் கட்டும் பணி துவங்குவது எப்போது?
சாயிபாபா காலனியில் மேம்பாலம் கட்டும் பணி துவங்குவது எப்போது?
ADDED : மே 15, 2024 12:57 AM
கோவை;'ஒர்க் ஆர்டர்' வழங்கப்பட்டு இரு மாதங்களாகியும், கோவை சாயிபாபா காலனியில் மேம்பாலம் கட்டும் பணி இன்னும் துவக்கப்படவில்லை.
கோவை - மேட்டுப்பாளையம் ரோட்டில், சாயிபாபா காலனியில் கங்கா மருத்துவமனை முன் துவங்கி, பஸ் ஸ்டாண்ட் வரை, 1,140 மீட்டர் நீளத்துக்கு நான்கு வழி மேம்பாலம் கட்டப்படுகிறது. இதற்காக, தேசிய நெடுஞ்சாலைத்துறை ரூ.52.90 கோடி ஒதுக்கியுள்ளது. இ.பி.சி., முறையில் டெண்டர் இறுதி செய்யப்பட்டு, கடந்த மார்ச் மாதம் ஒப்பந்த நிறுவனத்துக்கு 'ஒர்க் ஆர்டர்' வழங்கப்பட்டது. வரும், 2026 மார்ச், 6க்குள் முடிக்கும் வகையில், 24 மாதங்கள் அவகாசம் வழங்கப்பட்டிருக்கிறது. 'ஒர்க் ஆர்டர்' வழங்கப்பட்டு இரண்டு மாதங்கள் கடந்து விட்டன; இன்னும் வேலை துவங்கவில்லை.
சிங்காநல்லுாருக்கு மறுடெண்டர்
இதேபோல், சிங்காநல்லுாரில் ரூ.110.80 கோடிக்கு மேம்பாலம் கட்டுவதற்கு 'டெண்டர்' கோரப்பட்டிருந்தது. மதிப்பீட்டு தொகையை விட, 35 சதவீதம் அதிகமாக ஒப்பந்தம் கோரப்பட்டதால், அந்த டெண்டரை தேசிய நெடுஞ்சாலைத்துறை ரத்து செய்தது. மார்ச் 7ல் மறு டெண்டர் கோரப்பட்டது; ஒரு நிறுவனமும் ஒப்பந்தப்புள்ளி சமர்ப்பிக்கவில்லை.
லோக்சபா தேர்தல் நடவடிக்கைகள் முடிந்ததும் மூன்றாம் முறையாக மீண்டும் டெண்டர் கோர, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் முடிவு செய்திருக்கின்றனர். இதுதொடர்பாக, தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் கேட்டதற்கு, 'சாயிபாபா காலனியில் மேம்பாலம் கட்டுவதற்கு ஒப்பந்த நிறுவனத்துக்கு 'ஒர்க் ஆர்டர்' வழங்கி விட்டோம்.
ஜூன் 4 வரை லோக்சபா தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் இருக்கிறது. தேர்தல் நடவடிக்கைகள் முடிந்து, விதிமுறையை தளர்வு செய்ததும், போக்குவரத்து போலீசாருடன் ஆலோசித்து, கட்டுமான பணி துவக்கப்படும். சிங்காநல்லுாரில் மேம்பாலம் கட்டுவதற்கு மறுடெண்டர் கோரப்படும்' என்றனர்.

