/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நீங்கள் தருவதாக சொன்ன விடியல் எப்போது வரும்?
/
நீங்கள் தருவதாக சொன்ன விடியல் எப்போது வரும்?
ADDED : ஏப் 15, 2024 06:25 AM

கோவை : 'மோடியின் கேரன்டி மக்களுக்குத் தெரியும்; நீங்கள் தருவதாக சொன்ன விடியல் எப்போது வரும்?' என கேட்டு முதல்வர் ஸ்டாலினுக்கு, பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழக வளர்ச்சிக்காக, பா.ஜ., ரூ.10.76 லட்சம் கோடி கொடுத்துள்ளது என்ற தகவலை மறுத்து, முதல்வர் ஸ்டாலின் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். அதனை, அப்பட்டமான பொய்க்கணக்கு எனவும் விமர்சனம் செய்திருந்தார்.
அதற்கு பதிலடியாக, பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை கூறியிருப்பதாவது:
இத்தனை ஆண்டுகளாக, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, தமிழகத்தில் செயல்படுத்திய திட்டங்கள் அனைத்திற்கும், குடும்ப ஸ்டிக்கர் ஒட்டி விளம்பரம் செய்து கொண்டிருந்தார் முதல்வர் ஸ்டாலின்.
மூன்று ஆண்டு காலமாக, தி.மு.க., ஆட்சி வெற்று விளம்பரத்தில்தான் ஓடிக் கொண்டிருக்கிறது என்ற உண்மை, தற்போது மக்களுக்குத் தெரிய வந்ததும், பதற்றத்தில் மாற்றி மாற்றி பேசிக் கொண்டிருக்கிறார்.
பதில் சொல்லுங்கள் முதல்வரே!
தமிழகத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் விதமாக, நெடுஞ்சாலைகள், ரயில் நிலையங்கள், துறைமுகங்கள், விமான நிலையங்கள் இவற்றை எல்லாம் மேம்படுத்தச் செலவிடப்பட்ட, நிதி மற்றும் தமிழகத்தில் செயல்படும் திட்டங்களுக்கான மானியம் ஆகியவற்றை எந்தக் கணக்கில் வைப்பீர்கள் முதல்வரே?
தி.மு.க., ஸ்டிக்கர் ஒட்ட முடியாத காரணத்தால், இவை மத்திய அரசு வழங்கிய நிதி இல்லை என்று ஆகிவிடுமா?
மகனும், மருமகனும் ஒரே ஆண்டில் கொள்ளையடித்த ரூ.30,000 கோடி, எந்தக் கணக்கில் வரும்? அனைத்திற்கும் விரைவில் பதில் சொல்ல வேண்டியிருக்கும்.
மத்திய அரசு பெறும் வரிப்பணத்தில், தமிழகத்தின் உட்கட்டமைப்பு மேம்பாடு, பேரிடர் நிதி, அதுபோக, நீங்கள் ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்ளும் திட்டங்கள் என, ஏராளமாக கணக்கு சொல்ல முடியும். நீங்கள் பெறும் வரிப்பணத்தை, என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று கூற முடியுமா?
டாஸ்மாக் மதுக்கடை வருமானம் தொடங்கி, இல்லாத மின்சாரத்துக்கு கட்டண உயர்வு, வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் கட்டண உயர்வு, பத்திரப் பதிவு கட்டண உயர்வு, கொழுப்பு திருடப்பட்ட பால் விலை உயர்வு, இவை போக, ஜி.எஸ்.டி.,யில் சுமார் 70 சதவீத நிதி என, நேரடியாக தமிழக அரசுக்கு வரும் வருமானம் இத்தனை இருக்கையில் மாநிலம் முழுவதும், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், போக்குவரத்துத் துறை ஊழியர்கள், சிறுகுறு தொழில்முனைவோர் என, அனைத்துத் தரப்பினரும் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்களே... ஏன்?
ஆனால், தமிழக அமைச்சர்கள் குடும்பங்கள் மட்டும் பணத்தில் கொழிக்கிறார்களே, எப்படி? தமிழக அரசுக்கு வரும் வருமானம் எல்லாம் எங்கே செல்கிறது?
பிரதமர் மோடி உறுதியளித்த, 10 லட்சம் மத்திய அரசு வேலை வாய்ப்புகள் கடந்த 18 மாதங்களில் ஏற்கனவே வழங்கப்பட்டுவிட்டது என்பது கூடத் தெரியாமல், முதல்வர் ஸ்டாலின் இருப்பது தமிழகத்தின் சாபக்கேடு. 2021 தேர்தலின்போது, தி.மு.க., வாக்குறுதியளித்த மூன்றரை லட்சம் அரசு வேலைவாய்ப்புகள் என்ன ஆனது என்பதை, மக்களுக்குச் சொல்ல முதல்வர் தயாரா?
மதுரை எய்ம்ஸ் கல்லூரிக் கட்டடங்கள், 2026ம் ஆண்டு செயல்பாட்டுக்கு வரும் என நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர்கள் பலமுறை அறிவித்த பிறகும், மீண்டும் மீண்டும் 'மதுரை எய்ம்ஸ்' என்று உளறிக் கொண்டிருப்பதை என்னவென்று சொல்வது?
மதுரை எய்ம்ஸ், 2026ம் ஆண்டு செயல்பாட்டுக்கு வருவது உறுதி. அது மோடியின் கேரன்டி என்பதால், எய்ம்ஸ் வரும் என மக்களுக்கு தெரியும். ஆனால், நீங்கள் தருவதாகச் சொன்ன விடியல், எப்போது வரும் என்பதே மக்களின் கேள்வி.
இவ்வாறு, அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

