/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவைக்கு எப்போது வரும் முழு உடல் பரிசோதனை மையம்?
/
கோவைக்கு எப்போது வரும் முழு உடல் பரிசோதனை மையம்?
ADDED : ஜூன் 15, 2024 01:37 AM
சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனையில் செயல்படும், அதி நவீன முழு உடல் பரிசோதனை மையம் போன்று, கோவையிலும் அமைக்கப்படும் என்ற உத்தரவாதத்தை, முதல்வர் ஸ்டாலின் அறிவிக்க வேண்டும் என, எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கடந்த 2018ம் ஆண்டு, ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனையில் அம்மா முழு உடல் பரிசோதனை மையத்தை, அப்போதைய முதல்வர் பழனிசாமி துவக்கி வைத்தார்.
சென்னையில் உள்ளதைப் போன்றே, கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட ஆறு இடங்களில், முழு உடல் பரிசோதனை மையம் அமைக்கப்படும் என, அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் 2018 ஆகஸ்டில் அறிவித்தார். அறிவிப்போடு சரி.
தி.மு.க., அரசு பொறுப்பேற்றதும், 2022ல், இத்திட்டம் 'அதி நவீன முழு உடல் பரிசோதனை மையம்' என பெயர் மாற்றம் செய்யப்பட்டு, கூடுதலாக சிறப்பு பரிசோதனைகள் அறிமுகம் செய்யப்பட்டன.
ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனையில், உள்ள அதி நவீன முழு உடல் பரிசோதனை மையத்தில், கோல்டு, டைமண்ட், பிளாட்டினம், பிளாட்டினம் பிளஸ் என, நான்கு விதமான பரிசோதனைத் திட்டங்கள் உள்ளன. கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனை சாதாரண அளவில்தான் மேற்கொள்ளப்படுகிறது. கோவையில், தனிகட்டடத்தில், அதி நவீன முழு உடல் பரிசோதனை மையம் அமைக்கப்பட்டால், மேற்கு மாவட்ட மக்கள் பயனடைவர்.
கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் சொந்தமான இடத்தில், டைடல் பார்க்குக்கு வழங்கியது போக, 50 ஏக்கருக்கும் அதிகமான இடம் உள்ளது. அந்தப் பகுதியில் அதிநவீன முழு உடல் பரிசோதனை மையத்தை அமைக்கலாம்.
இன்று நடைபெறும் முப்பெரும் விழாவில், இதற்கான அறிவிப்பை வெளியிட்டு, விரைவில் அடிக்கல் நாட்டினால், அது தேர்தல் வெற்றியை தி.மு.க.,வுக்கு வழங்கிய கோவை மக்களுக்கு, முதல்வர் செலுத்தும் நிஜமான நன்றிக்கடனாக இருக்கும்!