/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நமக்கு விழ வேண்டிய ஓட்டுகள் போனதெங்கே? அ.தி.மு.க., நிர்வாகிகளிடம் வேலுமணி கேள்வி
/
நமக்கு விழ வேண்டிய ஓட்டுகள் போனதெங்கே? அ.தி.மு.க., நிர்வாகிகளிடம் வேலுமணி கேள்வி
நமக்கு விழ வேண்டிய ஓட்டுகள் போனதெங்கே? அ.தி.மு.க., நிர்வாகிகளிடம் வேலுமணி கேள்வி
நமக்கு விழ வேண்டிய ஓட்டுகள் போனதெங்கே? அ.தி.மு.க., நிர்வாகிகளிடம் வேலுமணி கேள்வி
ADDED : ஆக 08, 2024 12:46 AM

கோவை : 'தொண்டர்களை மதித்தால், நமது வெற்றி எளிதாகும்,'' என்று கோவை அ.தி.மு.க., அலுவலகத்தில் நடந்த செயல்வீரர்கள் கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் வேலுமணி கூறினார்.
கூட்டத்தில், வேலுமணி பேசியதாவது:
கடந்த தேர்தலில் நம் தொண்டர்கள் அதிகம் பேர் களத்தில் இருந்தனர். ஆனால் பல பூத்களில் குறைவான ஓட்டு பெற்று தோல்வியை தழுவினோம்.
நாம் வெற்றி பெற்ற தொகுதியில்தான், இந்த நிலை என்பதை நம்ப முடியவில்லை.
கட்சியில், உள்ளாட்சி அமைப்புகளில் ஏராளமானோருக்கு பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
கடந்த பத்தாண்டுகளில் நீங்கள் பரிந்துரைத்த, அத்தனை பணிகளையும் செய்து கொடுத்தேன். கோவையில் ஐம்பதாண்டு கால வளர்ச்சிப்பணிகளை செய்து கொடுத்தேன்.
அப்படி இருக்கும் போது, நமக்கு விழ வேண்டிய ஓட்டுக்கள் எங்கே போனது? ஓட்டுக்கள் சிதறியது எப்படி? எங்கு ஓட்டை விழுந்தது என்பதை ஆராய வேண்டும். எப்படி ஓட்டு வராமல் போனது என்று, நிர்வாகிகள் பதில் சொல்லியாக வேண்டும். ஒவ்வொரு ஓட்டும் நமக்கு வந்தாக வேண்டும்.
பெரும்பாலானோர் மாவட்ட பொறுப்பில் இருக்கிறீர்கள். ஆனால் என்ன பலன்? தோல்விக்கு நாம் ஒவ்வொருவரும் பொறுப்பேற்க வேண்டும்,
தோல்வியை பாடமாக ஏற்றுக்கொண்டு, அடுத்து களப்பணி மேற்கொள்ள வேண்டும். களப்பணி மேற்கொள்ளும் தொண்டர்களை, மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும். பூத் பொறுப்பாளர்களை நம்ப வேண்டும்.
இவ்வளவு பெரிய தோல்விக்குப் பின், நாம் பேசியே ஆக வேண்டும் என்பதால்தான் பேசுகிறேன். ஓட்டுக்கள் சிதறக்கூடாது. அனைவரையும் அரவணைத்து சென்றால், நம் வெற்றி எளிதாகும். வர உள்ள சட்டசபை தேர்தல், மிக முக்கியமானது. கவனமாக இருக்க வேண்டும்.
கூட்டணியை பற்றி நீங்கள் கவலைபட வேண்டாம். நமது அடிப்படை கட்டமைப்பு பணிகளில் கவனமாக இருக்க வேண்டும். ஒவ்வொருவரது உழைப்பும் அவசியம். ஒவ்வொருவரும் இறங்கி சென்று மக்களை சந்திக்க வேண்டும். எந்த சூழலிலும் யாரையும் ஒதுக்கக்கூடாது. மனசாட்சிக்கு விரோதமின்றி செயல்பட வேண்டும்.
நாம் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் உள்ளாட்சி அமைப்புகள், அறங்காவலர்கள் அரசு சாரா பொறுப்புகளில் நீங்கள்தான் பொறுப்புக்கு வருவீர்கள். அதனால் பணிகளை துரிதப்படுத்துங்கள்.
இவ்வாறு, வேலுமணி பேசினார்.
முன்னதாக கோவை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ., அம்மன் அர்ஜூனன், கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ.,அருண்குமார், முன்னாள் அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்ட பலர் பேசினர்.
முன்னதாக, வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, நான்கு லாரிகள் நிறைய நிவாரணப்பொருட்களை வேலுமணி உள்ளிட்ட நிர்வாகிகள் அனுப்பி வைத்தனர்.